வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்
முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஒரு அமைச்சர் கல்லால் அடிக்கிறார்; மற்றொருவர் சொல்லால் அடிக்கிறார். வேறொருவர் கையால் தாக்குகிறார்; அடுத்தொருவர் தரக்குறைவாக பேசுகிறார். இவற்றுக்கெல்லாம் சப்பைக் கட்டு கட்டுகிறார் இன்னொரு அமைச்சர். அதாவது, திராவிட மாடல் ஆட்சியில், தி.மு.க.,வினர் தவறு செய்வதும், ரவுடித்தனமாக நடப்பதும், அவர்களின் பிறப்புரிமை என்றாகி விட்டது.
நாம் என்ன வேண்டுமானாலும் பேசலாம், செய்யலாம்... முதல்வர் ஸ்டாலின் கண்டுகொள்ள மாட்டார் என்ற தைரியம், இவர்களின் ரத்தத்தில் ஊறியிருப்பது வெள்ளிடைமலை.

தமிழகத்தில் அங்கிங்கெனாதபடி, எங்கும் ரவுடியிசம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. உயர் பதவியில் இருக்கும் கவர்னருக்கோ, மேயருக்கோ சுத்தமாக மரியாதை இல்லை. இதற்கெல்லாம் காரணம், இவர்களிடம் கொட்டிக் கிடக்கும் பணம்; தட்டிக் கேட்காத தலை. பதவிக்காக காய்ந்து போயிருந்த தி.மு.க.,வினர், இன்று வந்த வாழ்வில், தலைகால் தெரியாமல் ஆடுகின்றனர்.
உண்மையிலேயே மக்களுக்கு நல்லதுசெய்ய நினைத்திருந்தால், அமைச்சர்கள் மற்றும் கட்சியினரின் அடாவடிகளை, முதல்வர் ஸ்டாலின் தண்டித்திருக்க வேண்டும். அதை விட்டு விட்டு, மீட்டிங் போட்டு மாணவர்களுக்கும், மக்களுக்கும், 'இப்படி இரு, அப்படி இரு' என்று உபதேசிப்பது, வேடிக்கையிலும் வேடிக்கை.
அமைச்சர்களும், தி.மு.க.,வினரும், தலைகால் புரியாமல் ஆடிக் கொண்டிருக்கையில், 'தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது' என்று கூறி, கனவுலகில் ஸ்டாலின் வாழ்வதும் வேதனை. ஆயிரம், ரெண்டாயிரம் லஞ்சம் வாங்கும் சாமானியரை உடனடியாக கைது செய்யும் காவல்துறையின் கைகள், தி.மு.க., 'ரவுடி பேபிகள்' மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றன; அதற்கான அதிகாரத்தையும், காவல் துறைக்கு முதல்வர் கொடுக்கவில்லை.
முதல்வர் அவர்களே.... உங்களுக்கு மக்களை பற்றி கவலையில்லை; அவர்களின் எண்ணங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும், மரியாதை கொடுப்பதும் கிடையாது. உங்களை பொறுத்தவரை, ஓட்டுப் போடும் மக்கள், எடை பார்க்கும் இயந்திரங்கள். காசு போட்டால் சீட்டு வருவது போல, நீங்கள் பணம் கொடுத்தால் ஓட்டுப் போடுவர்... அவ்வளவு தான். அந்த மக்களின் வறுமையும், முட்டாள்தனமுமே உங்களின் மூலதனம்... அப்படித்தானே!
தவறுதலாக ஒரு வீட்டின் கதவை தட்டியதற்காக தன் கையையே வெட்டிக் கொண்டான், பொற்கை பாண்டியன்; தடம் புரண்ட ரயிலின் விபத்துக்காக பதவி துறந்தார், லால் பகதூர் சாஸ்திரி. இது, அன்றைய பாரதத்தின் பண்பட்ட வரலாறு; கல்வீச்சும், கன்னா பின்னா பேச்சும் இன்றைய தமிழகத்தின் புண்பட்ட திருஷ்டிதோஷம்.
Advertisement