வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'மறைமுக விலை உயர்வை, ஆவின் நிறுவனம் கைவிட வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
கடந்த, 10 மாதங்களில் மட்டும், மூன்று முறை ஆவின் பால் பொருட்களின் விலையை உயர்த்தி, மக்கள் வயிற்றில் அடித்த தி.மு.க., அரசு, தற்போது புதுவித விலை உயர்வை செயல்படுத்தி உள்ளது.
ஆவின் பச்சை நிற பால் வகையில் கொழுப்பு சத்து அளவை, 4.5 சதவீதத்தில் இருந்து, 3.5 சதவீதமாக குறைத்திருக்கிறது.
கடந்த ஆண்டு ஆவின் ஆரஞ்சு பால் விலையை லிட்டருக்கு, 12 ரூபாய்; ஆவின் வெண்ணெய் லிட்டருக்கு, 20 ரூபாய்; நெய் லிட்டருக்கு, 50 ரூபாய் உயர்த்திய அரசு, மீண்டும் புதிய முறையிலான விலை உயர்வை செயல்படுத்துவதில் முனைப்பாக உள்ளது.

இதன் வாயிலாக ஆவின் நிறுவனத்தை முடக்கி, தங்களுக்கு வேண்டிய தனியார் நிறுவனங்கள் பயன்பெறுமாறு வழி செய்யும் நோக்கம் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
ஆரஞ்சு நிற பால் வகையின் விலையை ஏற்றியதால், பச்சை நிற பால் வகைக்கு மாறிய மக்களை வஞ்சிக்கும் வகையில், பச்சை நிற பால் விற்பனையை முதலில் குறைத்தார்கள்.
தற்போது, பச்சை நிற பால் வகையில், கொழுப்பு சத்தை குறைத்து, ஆரஞ்சு நிற பால் வகையை, மக்கள் மேல் கட்டாயப்படுத்தும் முயற்சி இது.
கடந்த ஆண்டு பால் விலை உயர்வுக்கு, ஜி.எஸ்.டி., தான் காரணம் என்று கூசாமல், பால் வளத்துறை அமைச்சர் நாசர் பொய் சொன்னார்.
ஆட்சிக்கு வந்ததில் இருந்து, 25 சதவீத விலை உயர்வை மக்கள் தலையில், அரசு சுமத்தி உள்ளது. மற்றொரு விலை உயர்வை தாங்கும் நிலையில், மக்கள் இல்லை என்பதை உணர வேண்டும்.
மறைமுக விலை உயர்வை கைவிட்டு, எளிய மக்களுக்கான ஆவின் நிறுவனத்தை, அவர்கள் பயன்படும்படி, நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.