வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: இடைத் தேர்தலில் பணப் பட்டுவாடா செய்வது குறித்து தமிழக அமைச்சர்கள் பேசியதாக பா.ஜ. அளித்த புகார் தொடர்பாக டி.ஜி.பி. மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு பிப்., 27ம் தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.தி.மு.க. கூட்டணி சார்பில் தமிழக காங். முன்னாள் தலைவர் இளங்கோவன் போட்டியிடுகிறார். தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பிரசாரத்தை துவக்கி உள்ளனர்.
வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது தொடர்பாக அமைச்சர் நேரு பேசியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பா.ஜ. மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் புகார் அளித்தார். நேரு பேசியது தொடர்பான வீடியோ ஆதாரங்களையும் தாக்கல் செய்தார்.
பா.ஜ. அளித்த புகார் தொடர்பாக தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஈரோடு தேர்தல் அலுவலரான மாவட்ட கலெக்டர் கிருஷ்ணன் உன்னி ஆகியோரிடம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் கேட்டுள்ளார். இது தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கும் தெரியப்படுத்தி உள்ளார்.

அதேபோல் 'வாக்காளர் பட்டியலில் 40 ஆயிரம் வாக்காளர்கள் வரை தொகுதியில் இல்லை. 'போலி வாக்காளர் அடையாள அட்டை தயார் செய்து அவர்கள் ஓட்டுகளை பதிவு செய்ய தி.மு.க. நடவடிக்கை எடுத்துள்ளது' என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்தார்.
அவரிடம் பொத்தாம் பொதுவாக புகார் கூறாமல் எந்த ஓட்டுச்சவடியில் எவ்வளவு வாக்காளர்கள் இல்லை என்ற விபரத்தை தரும்படி தேர்தல் கமிஷன் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.