கிருஷ்ணகிரி: ''ஓசூர், கோபசந்திரத்தில் நடந்த எருது விடும் விழாவில், அண்டை மாநில இளைஞர்கள் மாடுகளுடன் வந்ததே கலவரத்துக்கு காரணமாக அமைந்தது,'' என, மாவட்ட எஸ்.பி., சரோஜ்குமார் தாக்கூர் தெரிவித்தார்.
குளறுபடி
இதுகுறித்து, நேற்று அவர் கூறியதாவது:
ஓசூர் அருகே நடந்த எருது விடும் விழாவில், அரசின் கவனக்குறைவோ, மாவட்ட நிர்வாக குளறு படியோ இல்லை. விழா நடத்துபவர்கள், உரிய சான்றிதழை அளிக்க தாமதமானதால் இளைஞர்கள் பிரச்னையில் ஈடுபட்டனர்; உள்ளூர் பொதுமக்கள் யாரும் பிரச்னையில் ஈடுபடவில்லை.
பொதுவாக எருதுவிடும் விழாவில் உள்ளூர் மாடுகளை கொண்டே நடத்தப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், விதிகளுக்கு மாறாக, அண்டை மாநில வாலிபர்கள், தங்கள் மாடுகளுடன் வந்தனர்.
எருது விடும் விழா நடத்த தாமதமானதாக கூறி, அவர்கள் மறியல் செய்தும், தடுக்க சென்ற போலீசாரை தாக்கியும், பெண் போலீசாரிடம் அத்து மீறியும் நடந்தனர்.
கலவரத்தை தவிர்க்கவே, வன்முறையில் ஈடுபட்ட வாலிபர்களை பிடித்து, போலீசார் அமர வைத்தனர். மறியல், கலவரத்தில் ஈடுபட்டவர்களின் தாக்குதலில், அரசு உடைமைகள் சேதமாகின; போலீசாருக்கு காயம் ஏற்பட்டது; பொதுமக்களுக்கு காயமில்லை.
![]()
|
கடும் நடவடிக்கை
அங்கு, 4,000க்கும் மேற்பட்டோர் கூடிய இடத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த, 200 போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
எருது விடும் விழா நடத்துபவர்கள், விழாவிற்கு முந்தைய நாளே தகுதியுள்ள அனைத்து சான்றிதழ்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
முறையாக பெறும் சான்றிதழ் விபரங்களை போலீசாருக்கு தெரியப்படுத்த வேண்டும். அப்போது தான் பிரச்னை ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
எருது விடும் விழாவில் வெளி மாநில மாடுகளை பங்கேற்க அழைத்து வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.