வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மதுரை: தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் குரூப் 1 டி.இ.ஓ., நேரடி தேர்வில் இடம் பெற்ற புதிய அறிவிப்பால், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் படித்த தமிழக மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கல்வித்துறையில் காலியாக உள்ள மாவட்ட கல்வி அலுவலரான டி.இ.ஓ., பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு டி.என்.பி.எஸ்.சி.,யால் வெளியிடப்பட்டது.
இதில் விண்ணப்பிப்பவர்கள் கல்வித் தகுதியாக 10ம் வகுப்பு, மேல்நிலை படிப்பு, முதுகலை பட்டப்படிப்புடன் பி.எட்., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும், மேல்நிலை வகுப்பில் தமிழை ஒரு பாடமாக படித்தவர்கள் மட்டுமே இத்தேர்வை எழுத முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()
|
சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பில் தமிழ் பாடமாக படித்து, பிளஸ் 2வில் தமிழ் இல்லாத நிலையில், டி.இ.ஓ., பணிக்கு அப்பாடத்திட்டத்தில் படித்த தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது: டி.என்.பி.எஸ்.சி., சார்பில் துணை கலெக்டர், டி.எஸ்.பி., துணைப் பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் போன்ற குரூப் 1 பணியிடங்களுக்கு நடத்தப்படும் நேரடி தேர்வில் மேல்நிலை வகுப்பில் தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை.
ஆனால், கல்வித்துறையில் பதவிக்கு மட்டும் இப்படி உள்ளது. இதனால் சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
டி.இ.ஓ., நேரடி இத்தேர்வுக்கு பிப்., 13 விண்ணப்பிக்க கடைசி நாள். எனவே, அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் சமஉரிமை வழங்கும் வகையில் இந்த நிபந்தனையை தமிழக அரசு தளர்த்தி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.