வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவை அவிநாசி ரோட்டில் புதிதாக பாலம் கட்டப்படுவதால், ஏற்கனவே திட்டமிடப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மாற்றுத் திட்டங்கள் பற்றி மறுஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தகுதியான நகரமாக கோவை, கடந்த, 2011ல் மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டது. அதே நாளில் இந்தியாவில் தேர்வு செய்யப்பட்ட கொச்சி உள்ளிட்ட மற்ற இரண்டாம் நிலை நகரங்களில், மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்பட்டு முன்பே இயங்கத் துவங்கிவிட்டது. கோவையில் இன்னும் இத்திட்டத்துக்கு அடிக்கல் கூட நாட்டப்படவில்லை.
காகித அளவிலேயே
அ.தி.மு.க., ஆட்சியில், கோவை நகரில் புதிய பாலங்கள் கட்ட முயற்சி எடுக்கப்பட்டதே தவிர, மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டுவர சிறிதும் அக்கறை காட்டப்படவில்லை. தி.மு.க., ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்தும், இன்று வரையிலும் இத்திட்டம் காகித அளவிலேயே உள்ளது. இதற்கிடையே, அவிநாசி ரோட்டில், 10 கி.மீ., துாரத்துக்கு மேம்பாலம் கட்டும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.
சிங்காநல்லுார், சரவணம்பட்டி, சாய்பாபா காலனி ஆகிய இடங்களில், மூன்று மேம்பாலங்கள் கட்டும் பணி, மெட்ரோ ரயில் திட்டத்துக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கானல் நீராகவுள்ள மெட்ரோ ரயில் திட்டத்துக்காக, மத்திய அரசால் நிதி ஒதுக்கப்பட்ட பாலங்களும் கட்டப்படாமல் போய் விடுமோ என்று கோவையிலுள்ள தொழில், சமூக அமைப்பினர் அதிருப்தியில் உள்ளனர்.
ஆர்.டி.ஐ.,யில் வந்த தகவல்!
மெட்ரோ ரயில் திட்டம் வருவதற்கான அறிகுறியே எதுவும் தெரியாத நிலையில், இத்திட்டத்தின் நிலை குறித்து, சென்னையை சேர்ந்த தயானந்த் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக, சில தகவல்களை தமிழக அரசின் சிறப்புத் திட்டங்கள் செயலாக்க துறையிடமிருந்து வாங்கியுள்ளார்.
![]()
|
அதில் கிடைத்துள்ள தகவல்கள், இத்திட்டம் வருமா என்ற சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளன.
சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில், மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசின் தலைமைச் செயலர் தலைமையில், பல்வேறு துறைகளின் செயலர்கள் உள்ளிட்ட, 11 பேர் கொண்ட உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
அக்குழுவின், 24வது கூட்டம் கடந்த நவ., மாதம் நடந்துள்ளது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இதில் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி, கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆலோசனை நிறுவனம், கோவை நகரில் முதற்கட்டமாக, ரூ.9,424 கோடி மதிப்பில், இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை மொத்தம் 45.3 கி.மீ., துாரத்துக்கு செயல்படுத்தலாம் என்று திட்ட அறிக்கை தயாரித்து முன் மொழிந்துள்ளது.
எந்தெந்த வழித்தடத்தில்...
வெள்ளலுார் பஸ் முனையத்திலிருந்து, உக்கடம்-அவிநாசி ரோடு வழியாக, நீலாம்பூரிலுள்ள பி.எஸ்.ஜி., பவுண்டரி (பி.எஸ்.ஜி., ஐடெக்) வரை மொத்தம் 31.2 கி.மீ., துாரத்துக்கு முதல் வழித்தடத்தையும், கோவை கலெக்டர் ஆபீசிலிருந்து சத்தி ரோடு வழியாக, வளியாம்பாளையம் பிரிவு வரை, 14.1 கி.மீ., துாரத்துக்கு இரண்டாவது வழித்தடத்தையும் அமைக்கலாம் என்று திட்டம் முன் மொழியப்பட்டுள்ளது.
ஆனால், இப்போது அவிநாசி ரோட்டில் நான்கு வழி உயர் மட்ட மேம்பாலம் கட்டப்படுவதால், அந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவது பற்றியும் உயர் மட்டக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. அதில், அவிநாசி ரோட்டில் மறு ஆய்வு செய்து, மாற்றுத் திட்டங்களை பரிசீலிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மூன்று வாய்ப்புகள்
முதலில், அவிநாசி ரோட்டில் பொது போக்குவரத்துத் திட்டம் தேவைதானா என்பது பற்றி ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவிநாசி ரோட்டில் மெட்ரோ ரயில் திட்டம் தேவையெனும்பட்சத்தில், மூன்று விதமாக அதைச் செயல்படுத்த வாய்ப்புள்ளதா என்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் குழு பரிந்துரைத்துள்ளது.
தற்போதுள்ள இடத்தை வைத்து, தரையிலேயே மெட்ரோ ரயில் வழித்தடத்தை அமைக்க முடியுமா அல்லது பாலத்திலுள்ள துாண்களை பயன்படுத்தி, அதே பாலத்தின் மீது மெட்ரோ ரயில் வழித்தடத்தை அமைக்க முடியுமா அல்லது ரோட்டின் இடது புறத்தில் தனியாக உயர்மட்ட அளவில் மெட்ரோ ரயில் தடத்தை அமைக்க முடியுமா, இதற்கான செலவு, கால அவகாசம் ஆகியவற்றை ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வு நடந்து வருவதாகத் தெரிகிறது.
மூன்றுக்குமே வாய்ப்பில்லை!
அவிநாசி ரோட்டில் தரை தளத்திலும், மேம்பாலத்தின் இடது புறத்தில் தனியாகவும் மெட்ரோ ரயில் பாதை அமைக்க சிறிதும் வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை.
புதிய பாலத்தின் மீதும் மெட்ரோ ரயில் தடம் அமைப்பது சாத்தியமா என்ற கேள்வியும் எழுகிறது. அது மட்டுமின்றி, இந்த வழித்தடத்தின் துவக்கப்புள்ளியான வெள்ளலுார் பஸ் முனையமே கட்டப்படாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
சந்தேகம் வருகிறது
இதனால், கோவை மெட்ரோ ரயில் திட்டம் இப்போதைக்கு வரும் என்ற நம்பிக்கையே தொலைந்துள்ளது.
அடுத்த ஆண்டில் லோக்சபா தேர்தல் வருவதால், மெட்ரோ ரயில் திட்டத்தைத் துவக்குவது போன்று, கோவை மக்களை தமிழக அரசு ஏமாற்ற பார்க்கிறதோ என்ற சந்தேகமும் வலுத்து வருகிறது.
-நமது சிறப்பு நிருபர்-