மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம், கன்னியாகுமரி காங்., - எம்.பி., விஜய் வசந்த் அளித்து உள்ள கடிதம்:
காரோடு முதல் கன்னியாகுமரி வரை, நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கல், மண் தட்டுப்பாடு காரணமாக, பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. பணிகள் முடங்கிய காரணத்தால், ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் இந்த பணிக்காக விடப்பட்ட டெண்டரை முடிவு செய்து, நான்கு வழிச்சாலை பணியை இறுதி செய்ய வேண்டும்.

தான் சார்ந்த கட்சிக்காக அரசியல் மட்டுமே செய்யாமல், ஓட்டு போட்ட மக்களுக்காகவும் யோசித்து, மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய எம்.பி.,யை மனதார பாராட்டலாம்!
தமிழக காங்கிரஸ் எஸ்.சி., பிரிவு மாநில தலைவர் ரஞ்சன்குமார் அறிக்கை:
மறைந்த வாழப்பாடி ராமமூர்த்திக்கு பின், அதிக ஆண்டுகள், தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் நீடிக்கும் பெருமையை, தற்போதைய தலைவர், கே.எஸ்.அழகிரி பெற்றுள்ளார். அழகிரி மாநில தலைவரான பின் நடந்த லோக்சபா, சட்டசபை, உள்ளாட்சி தேர்தல் என அனைத்திலும், தொடர் வெற்றி பெற்று தந்துள்ளார். அது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் தொடரும்.
ஒவ்வொரு தேர்தலிலும், தொகுதி பங்கீடு பேச்சின் போது அவமானப்பட்டாலும், ஒன்றிரண்டு தொகுதிக்காக கண்ணீர் விட்டு கதறி அழுதாலும், தி.மு.க.,வை, 'உடும்பு பிடியா' அழகிரி பிடிச்சிட்டு இருக்கறதுக்கு கிடைத்த பரிசு தானே அந்த வெற்றி!
இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன் யாதவ் அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில், பாரம்பரியமாக நடைபெறும் எருதுவிடும் போட்டிக்கு அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று நிறைவடைந்த கடைசி நேரத்தில், அதற்கு தடை விதித்து, மக்களின் உணர்வுடன் விளையாடிஉள்ளது, தி.மு.க., அரசு. இதன் விளைவாக, அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டு, போராட்ட களமாக மாறி இருக்கிறது. தங்களின் கலாசாரத்தையும், பண்பாட்டையும் காக்கும் வகையில் போராடிய மக்கள் மீது, கண்ணீர் புகை குண்டு வீசி, தடியடி நடத்தியது ஆட்சி அராஜகத்தின் உச்சம்.
தி.மு.க.,வுக்கு காவடி துாக்கும் கூட்டணி கட்சிகள், கிருஷ்ணகிரி கலவரம் சம்பந்தமா ஏதாவது வாய் திறப்பாங்களா?
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ அறிக்கை:
'அடுத்த மூன்று ஆண்டுகளில், 47 லட்சம் இளைஞர்களுக்கு திறன் வளர்ச்சி பயிற்சி அளிக்கப்படும்' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார். 2014ல் இருந்து, மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. இதனால், பயன் பெற்ற இளைஞர்கள் எத்தனை லட்சம் பேர் என, மத்திய அரசு அறிவிக்குமா? வேலைவாய்ப்புகளை அதிகரிக்க உறுதியான அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் தருகிறது.

தமிழக அமைச்சர்கள் பலரும், தங்கள் துறை சார்ந்த தகவல்களை, புள்ளிவிபர புலியா, 'அடிச்சி' விடுறாங்களே... ஒரு நாளாவது அவங்க கிட்ட இவரு இப்படி கணக்கு கேட்டிருப்பாரா?