மதுரை: மதுரை தெற்குவாசல் பகுதியில் நேற்று பட்டப்பகலில் காதல் மனைவி வர்ஷாவை 19, குத்திக் கொலை செய்துவிட்டு தப்பிய கணவர் பழனி 28, நேற்றிரவு போலீசில் சரணடைந்தார்.
மதுரை தெற்குவாசல் சப்பாணி கோயில் தெருவைச் சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம். இவரது இளைய மகள் வர்ஷா 19. நேற்று மதியம் 1:15 மணிக்கு வீட்டருகே உள்ள கடைக்கு வந்தபோது ஹெல்மெட் அணிந்து டூவீலரில் வந்த நபர், வர்ஷாவின் தலைமுடியை பிடித்து இழுத்து கத்தியால் வாய்ப்பகுதி, இடது முழங்காலில் குத்திவிட்டு தப்பிச்சென்றார். அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் வர்ஷா இறந்தார்.
முதற்கட்ட விசாரணையில், வர்ஷாவின் கணவர் பழனி 28, கொலை செய்தது தெரிந்தது. அவரது அலைபேசி 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. காமராஜர்புரத்தில் உள்ள அவரது வீட்டிலும் இல்லை. இந்நிலையில் நேற்றிரவு கீரைத்துறை போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.
போலீசார் கூறியதாவது:
பழனி எம்.பி.ஏ., படிக்கும்போது, வர்ஷாவின் அக்காவை ஒருதலையாக காதலித்தார். இதுதொடர்பாக பழனி மீது 2021ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரை பழிவாங்க நினைத்து தங்கை வர்ஷாவை பழனி காதலித்தார். அக்காவை காதலித்தவர் எனத்தெரிந்தும் அவரை வர்ஷா காதலித்தார். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும் கடந்த செப்.,ல் திண்டுக்கல் பகுதி கோயிலில் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் மதுரை நகர் மகளிர் போலீசாரிடம் தஞ்சமடைந்தனர். பெற்றோரும், போலீசாரும் அறிவுறுத்தியும் அதை பொருட்படுத்தாமல் பழனியுடன் குடும்பம் நடத்தினார். 40 நாட்களில் பழனியின் நடவடிக்கை பிடிக்காததால் தந்தை வீட்டிற்கு திரும்பினார்.
இதனால் மகளிர் போலீசில் பழனி புகார் செய்தார். விசாரணையின்போது குடும்பம் நடத்த வரமறுத்த வர்ஷாவிடம் 'உனக்கு நான் போட்ட நகைகள் எல்லாம் திருப்பிக்கொடு. எவ்வளவு செலவு செய்திருப்பேன்' என வாக்குவாதம் செய்தார். போலீசார் சமரசம் செய்தனர். ஆனாலும் கணவரை பிரிந்து தந்தை வீட்டிலேயே வர்ஷா இருந்தார். நேற்று கடைக்கு வந்தபோது குத்திக்கொலை செய்யப்பட்டார்.இவ்வாறு கூறினர்.
மாணவி பாலியல் பலாத்காரம்: ஆசிரியர் உட்பட இருவர் கைது
திருச்சி : -திருச்சி, லால்குடி அருகே, அரசு பள்ளியில் படிக்கும், 14 வயது மாணவியை, பாலியல் பலாத்காரம் செய்த அறிவியல் ஆசிரியர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பூவாளூர் அரசு பள்ளியில் படிக்கும், 14 வயது மாணவியை, அதே பள்ளியில் அறிவியல் ஆசிரியராக வேலை செய்யும் சதீஷ்குமார், 40, நான்கு மாதங்களுக்கு முன், பள்ளி கழிப்பறையில் பாலியல் பலாத்காரம் செய்தார்.
அதே போல, அந்த மாணவியை, பூவாளூர் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன், 55, என்பவரும் பாலியல் பலாத்காரம் செய்ததால், அவர் மூன்று மாத கர்ப்பமாக உள்ளார்.
மாணவியின் பெற்றோர் கொடுத்த புகார் படி, லால்குடி அனைத்து மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, ஆசிரியர் சதீஷ்குமார் மற்றும் சந்திரசேகரன் ஆகியோரை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.
பஞ்சாப் குற்றவாளி சென்னையில் கைது
சென்னை, :பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் குல்ஜீத் சிங், 36. இவர் மீது, பஞ்சாப் மாநிலம், படிண்டா மாவட்ட போலீசில், பண மோசடி உட்பட இரண்டு பிரிவுகளின் கீழ், வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், சென்னையில் இருந்து, மலேஷியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூருக்கு, 'ஏர் ஏசியா' விமானம் செல்ல இருந்தது. அதில் பயணிப்பதற்காக, குல்ஜீத் சிங் நேற்று முன்தினம், சென்னை விமான நிலையம் வந்தார்.
அவரது ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப் போது, பல்வேறு வழக்குகளில், குல்ஜீத் சிங் தேடப் படும் குற்றவாளி என தெரிய வந்தது.
இது தொடர்பாக, பஞ்சாப் மாநில போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சென்னை வந்து, குஸ்ஜீத் சிங்கை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
சிறுமி பலாத்காரம் காமுகனுக்கு 41 ஆண்டு சிறை
பாலக்காடு : கேரளாவில், 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், குற்றவாளிக்கு 41 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள தச்ச நாட்டுகரையைச் சேர்ந்தவர் ஹம்சா, 51.
மதரசா எனப்படும் இஸ்லாமிய கல்வி போதிக்கும் பள்ளியின் ஆசிரியரான இவர், கடந்த ஆண்டு, 10 வயது சிறுமியை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
இவ்வழக்கு நேற்று விரைவு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது குற்றவாளிக்கு, 41 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சதீஷ்குமார் தீர்ப்பளித்தார்.
லாட்டரி விற்ற இருவர் கைது
விழுப்புரம் : லாட்டரி சீட்டு விற்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா போலீசார், ஆசாகுளம் நரிக்குறவர் காலனியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, லாட்டரி சீட்டு விற்ற அதே பகுதியைச் சேர்ந்த சரத்குமார், 25; சந்தானம், 46; ஆகியோரை கைது செய்தனர்.
சூதாடிய 6 பேர் கைது
விழுப்புரம் : விழுப்புரம் அருகே பணம் வைத்து சூதாட்டிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார், சிந்தாமணி மாந்தோப்பு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு, பணம் வைத்து சூதாடிய அதே பகுதியைச் சேர்ந்த மதன், 23; அருண், 27; விக்னேஷ், 26; ராமச்சந்திரன், 30; வடிவேல், 29; சங்கர், 47; ஆகியோரை கைது செய்து, 3,670 ரூபாய் மற்றும் 5 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.