வாலிபர் மூக்கை கடித்த விவகாரம்: 2 பேர் கைது
கரூர்: கரூர் அருகே, வாலிபரின் மூக்கை கடித்தது தொடர்பாக, இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், மரவாப்பாளையம் புது தெருவை சேர்ந்தவர் விஷ்வா, 35; மொபைல் கடை நடத்தி வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சுரேஷ், 42; என்பவருக்கும் இடையே, நிலப்பிரச்சனை தொடர்பாக முன் விரோதம் உள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு விஷ்வா மற்றும் அவரது தாய் ஆகிய இருவரும் நெரூர் அக்ரஹாரம் பகுதியில் அமர்ந்து இருந்தனர். அப்போது, குடிபோதையில் சென்ற சுரேஷ், அவரது நண்பர் சக்திவேல், 46, ஆகியோர், விஷ்வாவிடம் தகராறு செய்தனர்.
மேலும், சுரேஷ், விஷ்வாவின் மூக்கை பிடித்து கடித்துள்ளார். காயமடைந்த விஷ்வா, கொடுத்த புகாரின் படி, வாங்கல் போலீசார் சுரேஷ், சக்திவேல் ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
க.பரமத்தி அருகே மணல் அள்ளிய 5 பேர் மீது வழக்கு
கரூர்: க.பரமத்தி அருகே, அமராவதி ஆற்றில் மணல் அள்ளியதாக, ஐந்து பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கரூர் மாவட்டம், க.பரமத்தி போலீஸ் எஸ்.ஐ., உதயகுமார் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம், விஸ்வநாதபுரி அமராவதி ஆற்றுப்பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அனுமதி இல்லாமல் அமராவதி ஆற்றுப்பகுதியில் இருந்து, மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி சென்ற செல்லமுத்து, ராமச்சந்திரன், சகாதேவன், கருமலை, காளிதாஸ் ஆகியோர், போலீசை கண்டதும், மாட்டு வண்டிகளை நிறுத்தி விட்டு ஓடி விட்டனர்.
இதையடுத்து, மணலுடன் நிறுத்தப்பட்டிருந்த, மாட்டு வண்டியை பறிமுதல் செய்த க.பரமத்தி போலீசார், செல்லமுத்து உள்பட, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
சாரல் மழை எதிரொலி நெல் அறுவடை பாதிப்பு
கிருஷ்ணராயபுரம்: பரவலாக சாரல் மழை பெய்ததால் நெல் அறுவடை பணி பாதிக்கப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் மாயனுார், திருக்காம்புலியூர், மகாதானபுரம், லாலாப்பேட்டை, நந்தன்கோட்டை, வல்லம், வீரவள்ளி ஆகிய இடங்களில், 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று காலை முதல் அப்பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வயல்களில் நெற்கதிர் இயந்திரம், டிராக்டர் கொண்டு அறுவடை செய்யும் பணி பாதிக்கப்பட்டது.
மழை நின்று வெயில் அடித்தால் மீண்டும் அறுவடை பணி தொடங்கும் என விவசாயிகள் கூறினர்.
மூதாட்டி தற்கொலை
கரூர்: அரவக்குறிச்சி அருகே, ஆஸ்துமா நோய் காரணமாக, மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே தாளியாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்லம்மாள், 70; இவருக்கு, பல ஆண்டுகளாக ஆஸ்துமா நோய் இருந்தது. இதனால், மனம் உடைந்த செல்லம்மாள், நேற்று முன்தினம் விஷம் குடித்தார்.
பிறகு, ஆபத்தான நிலையில் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். அரவக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.