வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
புதுடில்லி: டில்லியில் திருமணமாகாமல் கர்ப்பமடைந்த மாணவியை, பிரசவம் வரை தன்னுடன் வைத்து கவனித்து கொள்வதாக உச்சநீதிமன்றத்தில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டி கூறினார். இதனை ஏற்று கொண்ட நீதிமன்றம் அவருக்கு பாராட்டு தெரிவித்தது. குழந்தை பிறக்கும் வரை அனைத்து உதவிகளையும் வழங்க எய்ம்ஸ்க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலைநகர் புதுடில்லியில் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து பி. டெக் படிக்கும் 21 வயதான மாணவி ஒருவர் கருவுற்றார். இது தெரியவந்ததை தொடர்ந்து விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிறகு, உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். கருவைக் கலைக்க முயற்சியும் நடந்தது. இந்த விவகாரம் தெரிந்து வழக்கு பதிவானது.
உச்சநீதிமன்றத்திலும் வழக்குப்பதிவானது. நீதிமன்ற உத்தரவுப்படி, எய்ம்ஸ் டாக்டர்கள் குழு, அந்த மாணவியை பரிசோதித்தது. கருவை கலைத்தால் தாய், சேய் இரண்டு பேரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
அந்த மாணவியை கவனித்து கொள்ளுமாறு உச்சநீதிமன்ற கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டியை நீதிபதிகள் கேட்டு கொண்டனர். பிறகு, அந்த மாணவியின் சகோதரியை தொடர்பு கொண்ட ஐஸ்வர்யா, பிறக்க போகும் குழந்தையை தத்தெடுத்து கொள்ள விருப்பமா என கேட்டார். அதற்கு அவர் மறுத்துவிட்டார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம்(பிப்.,2) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி.பர்திவாலா ஆகியோர், தங்கள் சேம்பரில் அழைத்து விசாரித்தனர்.
அப்போது, மாணவி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அமித் மிஸ்ரா, ''மாணவியின் தந்தை கோவிட் தொற்றால் இறந்துவிட்டார். தாயும் உடல்நிலை சரியில்லாமல் மோசமாக இருக்கிறார். எனவே, மாணவி தங்குவதற்கு உதவி செய்ய வேண்டும்'' என வேண்டுகோள் வைத்தார்
அப்போது கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டி, ''மாணவியை பிரசவத்துக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கும் வரை, அவரை என் வீட்டிலேயே பாதுகாப்பாக தங்க வைத்துக் கொள்கிறேன்'' என்று தெரிவித்தார். இதைக்கேட்ட நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.
சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நீதிபதிகளிடம் கூறும்போது, '' குழந்தையை தத்தெடுக்க ஒரு தம்பதி விருப்பம் தெரிவித்துள்ளனர். மத்திய தத்தெடுப்பு ஆணையத்தில் அவர்கள் பதிவு செய்து வைத்துள்ளனர். அவர்களுடைய பெயர், விவரங்களை நீதிமன்ற ஆவணங்களில் ரகசியமாக வைத்திருக்க வேண்டும்.
தத்தெடுக்கும் தம்பதியின் விவரங்களை மாணவிக்கும் தெரியப்படுத்த கூடாது. குழந்தையை தத்தெடுப்பதற்கான நடைமுறைகள் முடிந்தால் பிறக்கும் குழந்தைக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்'' என வேண்டுகோள் வைத்தார்.

இதையடுத்து, அரசியலமைப்பு சட்டப் பிரிவு 142-ன் கீழ் உச்ச நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த பிரச்சினையில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு : மாணவியை எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்து பிரசவம் வரை மருத்துவ உதவிகள் செய்ய வேண்டும்.
பிரசவத்துக்கு பிந்தைய உதவிகளையும் செய்யவேண்டும். பிறக்கப்போகும் குழந்தையை தத்தெடுத்துக் கொள்ள அந்த இளம் தம்பதிக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
அதற்கான நடைமுறைகளை மத்திய தத்தெடுப்பு ஆணையம் விரைந்து முடிக்க வேண்டும். தத்தெடுப்பவர்களின் விவரங்களை உச்ச நீதிமன்றத்தின் அனைத்து ஆவணங்களிலும் ரகசியமாக வைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மிகவும் மன அழுத்தத்தில் இருந்தோம். இந்த சிக்கலான விஷயத்தில் மனிதாபிமான முறையில் செயல்பட்ட கூடுதல் சொசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டை மனமார பாராட்டுகிறோம் என உத்தரவில் தெரிவித்தனர்.
Advertisement