சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், பழனிசாமி தரப்பில் போட்டியிடும் தென்னரசுவை ஆதரிக்க வேண்டும் என பன்னீர்செல்வத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறோம் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: கூட்டணி தர்மம் காக்கப்பட வேண்டும் என்பது பா.ஜ.,வின் நிலைப்பாடு. அ.தி.மு.க., வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் நிற்க வேண்டும். வலிமையான வேட்பாளர் அறிவிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பயணம் செய்கிறோம். பழனிசாமி, பன்னீர்செல்வத்தை சந்தித்த போது, ஒரே வேட்பாளர் குறிப்பாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தினோம்.

ஒரே வேட்பாளர், உறுதியான வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் நிறுத்த வேண்டும் என பழனிசாமி, பன்னீர்செல்வத்திடம் வேண்டுகோள் விடுக்கிறேன். ஈரோடு கிழக்கில் வேட்பாளரை நிறுத்த மாட்டோம் என பழனிசாமியிடம் கூறியுள்ளேன். பிரச்னைகளை சரி செய்து வேட்பாளரை நிறுத்த வேண்டும் அவரிடம் வலியுறுத்தி உள்ளேன்.

பன்னீர்செல்வத்தை சந்தித்த போது, இந்த இடைத்தேர்தல் முக்கியமான தேர்தல். பழனிசாமி வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன். அப்போது, விண்ணப்ப படிவத்தில் கையெழுத்து போட தயார் எனக்கூறிய பன்னீர்செல்வம் அதற்கு சில நிபந்தனைகளை விதித்தார். உட்கட்சி விவகாரத்தில் பா.ஜ., தலையிடாது என்பதில் உறுதியாக உள்ளோம்.
தென்னரசு, தொகுதியில் நன்கு அறிமுகம் ஆனவர். இரண்டு முறை எம்.எல்.ஏ., ஆக இருந்துள்ளார். சரியான நபர் வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறோம். பழனிசாமியின் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என பன்னீர்செல்வத்திடம் வேண்டுகோள் விடுக்கிறோம். தென்னரசுவை ஏற்பது குறித்து பன்னீர்செல்வம் நல்ல முடிவு எடுப்பார். தனது வேட்பாளரை பன்னீர்செல்வம் திரும்ப பெற்று கொள்ள வேண்டும் என்பது பா.ஜ.,வின் விருப்பம்.

உட்கட்சி விவகாரத்தில் தலையிட போவது இல்லை. அந்த எண்ணமும் கிடையாது. அ.தி.மு.க., பிரச்னையை அவர்கள் தீர்த்து கொள்ள வேண்டும். அதற்கும் பா.ஜ.,வுக்கும் எந்த தொடர்பும் இல்லை. பிளவுபட்டு நின்றால், பாதிப்பு இருக்கும். இந்த விவகாரத்தில் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறேன்.ஒரு தேசிய கட்சியாக, சுயேச்சை சின்னத்தில் நிற்பவருக்கு ஆதரிக்க இயலாது. பிற கட்சியின் வீழ்ச்சியில் பா.ஜ.,வை வளர்க்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
Advertisement