ஆண்டுதோறும் ஒரு கோடி பேர் புற்றுநோய்க்கு பலியாகின்றனர். 6 மரணங்களில் ஒரு மரணம் புற்றுநோயினால் நிகழ்வதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதன் மூலம், ஆரம்ப நிலையிலேயே கண்டறிதலையும் சிகிச்சைகள் மூலம் புற்றுநோய் குணப்படுத்தலை அதிகரித்திடவும், 2008-ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 4 'உலக புற்றுநோய் தினமாக' கடைபிடிக்கப்படுகிறது.

புற்றுநோயுள்ளவர்கள் சிகிச்சை பெறுவதற்கு குறைந்த வருமானம், கல்லாமை, வயது, பாலினம், இடம், இனம் போன்றவை தடைகளாக உள்ளன. இந்த இடைவெளியை நீக்க வேண்டி, இந்தாண்டிற்கான உலக புற்றுநோய் தினத்தின் மையப்பொருள் 'Close the care gap' என வலியுறுத்தப்பட்டுள்ளது.
புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகிறது, வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள், தொடர் பரிசோதனைகள் மூலம் எவ்வாறு ஆரம்ப நிலையிலேயே அதை கண்டறிவது போன்றவை குறித்து புதுவை ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரியின் குழந்தை நல மருத்துவர் மு. ஜெயராஜ் அவர்கள் கூறியதாவது: புற்றுநோய் என்றாலே உயிர் கொல்லி நோய் என பலரும் அஞ்சி நடுங்குகின்றன. பல்வேறு புற்றுநோய்கள், ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும். மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் காரணமாக, முற்றிய நிலையிலுள்ள பல்வேறு புற்றுநோய்களுக்குக் கூட சிறந்த சிகிச்சைகள் வந்துவிட்டன. இதன் மூலம் நீண்ட காலம் புற்றுநோயின் பாதிப்புகள் ஏற்படாமல் வாழ்ந்திட முடியும்.

புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகிறது ?
உடலின் செல்கள், ஜீன்களில் ஏற்படும் மரபுவழி கோளாறினாலோ, வேறு காரணிகளால் ஏற்படும் மாற்றங்களாலோ மிகைப்பெருக்கத்திற்கு உள்ளாகி, புற்றுநோய் செல்களாக மாறுகின்றன. இந்த புற்றுநோய் செல்கள் பெருகும் வேகம், மற்ற உடற்பகுதிகளுக்கு பரவும் ஆற்றலுடையதா இல்லையா என்பதைப் பொறுத்து, கேடு விளைவிக்கா கட்டிகள் (BenignTumors) மற்றும் கேடு விளைவிக்கின்ற கட்டிகள் (Malignant Tumors) என வகைப்படுத்தப்படுகின்றன.
ரத்த புற்றுநோயைத் தவிர்த்து ஏனைய புற்றுநோய்களில் பொதுவாக கட்டிகள் தோன்றும். புற்றுநோய் முற்றிய நிலையில், புற்றுநோய் செல்கள் ரத்த சுற்றோட்டத்தின் வழியாகவோ அல்லது நிணநீர்த் தொகுதி (Lymphatic system) வழியாகவோ மற்ற உடற்பாகங்களுக்கு பரவக்கூடும்.
புற்றுநோய் வராமல் தடுக்கும் வழிமுறைகள்
ஜீன்களில் ஏற்படும் மரபுவழி கோளாறினால் ஏற்படும் புற்றுநோய் 10%. வேறு பல காரணிகள் ஏற்படுத்தும் மாற்றங்களால் விளையும் புற்றுநோய் பெரும்பான்மையாக உள்ளது. இந்த காரணகிகளை நம் வாழ்வியல் முறையில் சில பல மாற்றங்கள் மூலம் நீக்கினால், புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை பெரும்பான்மையாக் குறைத்திடலாம்.
அந்தக் காரணிகள் என்னென்ன என்று பார்க்கலாம்
புகையிலை பொருட்களை முற்றிலும் தவிர்த்திட வேண்டும். புகை பிடிப்பவர்களுக்கு அருகில் நின்றாலும் புற்றுநோய் ஏற்படக்கூடுமென்பதால், பொது இடங்கள், அலுவலகங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில், புகைப்பிடித்தலை மிகத்தீவிரமாக அரசு தடுத்திட வேண்டும்.

நிறைவுற்ற கொழுப்புகள் (saturated fats) அதிகம் நிறைந்த உணவுகளை தவிர்த்திட வேண்டும். பழங்கள் மற்றும் கீரை வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
குடிப்பழக்கத்தை முற்றிலும் தவிர்த்திடுங்கள்.
தினந்தோறும் உடற்பயிற்சி செய்திடுவதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
உடல்பருமனை ஆரோக்கியமான உணவுமுறை, உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி மூலம் குறைத்திடுங்கள்.
சி.டி., ஸ்கேன்,எக்ஸ்-ரே போன்றவற்றை மருத்துவர்கள் அறிவுறுத்தினால் மட்டுமே செய்துகொள்ளுங்கள். சூரியனின் புறஊதாக்கதிர்களால் தோல் புற்றுநோய் ஏற்படும் அபாயமுள்ளதால், வெளியில் செல்லும்போது முடிந்தவரை புறஊதாக்கதிர்கள் புகா கண்ணாடிகள், உடலை முழுமையாக மூடும் உடைகள், குடைகள் போன்றவற்றை உபயோகப்படுத்துங்கள்.
சுற்றுச்சூழல் மாசுபாட்டினை தடுத்திட வேண்டும். பெருநகரங்களில், காற்றில் அதிகளவு மாசு இருந்தால், வெளியில் செல்லும்போது, முகக்கவசத்தை உபயோகப்படுத்தலாம். தொழிற்சாலைகளில் வேலை செய்வோர், பாதுகாப்பு உபகரணங்களை எப்போதும் உபயோகப்படுத்திடுங்கள்.
புற்றுநோய் ஏற்படும் தொற்றிலிருந்து விலகியிருங்கள்
ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி, எச்.ஐ.வி, மனித பாப்பிலோமா வைரஸ் போன்ற நோய்த்தொற்றுகளால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இவை பெரும்பான்மையாக உடலுறவினால் மற்றவர்களுக்கு பரவுவதால், பாதுகாப்பான உடலுறவின் மூலம் இந்த நோய்த்தொற்றுகளை தடுத்திடலாம்.
ஹெபடைடிஸ் பி மற்றும் மனித பாப்பிலோமா வைரஸிற்கு எதிரான தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளலாம். குறிப்பாக, பெண்களுக்கு ஏற்படும் 2-வது அதிகமான புற்றுநோயான கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மனித பாப்பிலோமா வைரஸால் ஏற்படுகிறதென்பதால், வளரிளம் பருவத் தொடக்கத்திலேயே HPV தடுப்பூசியை போட்டுக்கொள்ள உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்துகிறது.

பரிசோதனைகள்
புற்றுநோயினை ஆரம்பக்கட்டதிலேயே கண்டறிந்து சிகிச்சையளிப்பதன் மூலம், முற்றிலும் குணப்படுத்திவிடலாம். முப்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள், கர்ப்பப்பைவாய் புற்றுநோயினை கண்டிட உதவும் 'பாப் ஸ்மியர்' (Pap smear) பரிசோதனையை மூன்று வருடத்திற்கு ஒரு முறையும், 40 வயதுக்கு மேல், மார்பக புற்றுநோயை கண்டிட உதவும் 'மேமோகிராம்' பரிசோதனையை 1-2 வருடங்களுக்கு ஒரு முறையும் மேற்கொள்ள வேண்டும். 45 வயதுக்கு மேலுள்ளவர்கள் பெருங்குடல் மலக்குடலுக்குரிய புற்றுநோயிற்கான (Colorectal Cancer) பரிசோதனைகளை செய்திட வேண்டும்.

புற்றுநோயைத் தடுக்க மேற்கண்ட வாழ்வியல் மாற்றங்களை, இன்றைய உலக புற்றுநோய் தினத்திலேயே தொடங்கிடுவோம். புற்றுநோய் இல்லா உலகை உருவாக்கிட உறுதியேற்றிடுவோம். இவ்வாறு மருத்துவர் மு. ஜெயராஜ் கூறினார் .