சென்னை: இரட்டை இலை சின்னத்தில் யார் நின்றாலும் ஆதரிப்போம் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கூறியுள்ளனர்.
சென்னையில் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான பண்ரூட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் நிருபர்களை சந்தித்தனர். அப்போது, பன்னீர்செல்வத்தின் அறிக்கையை வைத்திலிங்கம் வாசித்தார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: ஈரோடு கிழக்கு தொகுதியில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு மூலம் ஒற்றுமையாக போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், இந்த உத்தரவு மூலம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவு எங்களை எதிர்த்தோருக்கு சரியான பாடமாக அமைந்துள்ளது. ஒருங்கிணைப்பாளராக நீடிக்க எந்த தடையும் விதிக்கப்படவில்லை. அதேநேரத்தில் பழனிசாமியின் பொறுப்புக்கு தேர்தல் ஆணையமும், உச்சநீதிமன்றமும் அங்கீகரிக்கவில்லை. இரட்டை இலை சின்னமும், அதில் போட்டியிடுபவரும் வெற்றி பெற பாடுபடுவோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிறகு வைத்திலிங்கம் கூறுகையில், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் நீக்கப்பட்டது செல்லாது என்ற உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. பொதுக்குழு செல்லாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். இரட்டை இலை சின்னத்தில் நிற்பவர் யாராக இருந்தாலும் ஆதரிப்போம். தமிழ்மகன் உசேன் அளித்த வேட்பாளர் தேர்வு செய்யும் படிவம் இதுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை.
பண்ருட்டி ராமச்சந்திரன் கூறுகையில், பொதுக்குழுவுக்கு பிறகே வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படும். பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் வாபஸ் பெற வேண்டும் என்ற அண்ணாமலையின் பேட்டி குறித்து கருத்து ஏதும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement