வடமாநிலங்களில் இருந்து கடலைபருப்பு பெற்று மாவாக அரைத்து விற்க அக்மார்க் அனுமதியுள்ளது. அரிசி, கேழ்வரகை மாவாக அரைத்து விற்பதற்கு மத்திய அரசின் அக்மார்க் பட்டியலில் அனுமதி தரவில்லை.
தமிழகத்தில் நன்செய் நிலத்தில் நெல்லும் மானாவாரி மற்றும் தரிசு நிலங்களில் கேழ்வரகு, சிறுதானியங்கள் அதிகம் விளைவிக்கப்படுகிறது. உணவுப்பொருளின் தரத்தை நிர்ணயித்து மத்திய அரசின் விற்பனை ஆய்வு இயக்குனரகம் (டி.எம்.ஐ.,) அக்மார்க் முத்திரைக்கு பரிந்துரைக்கிறது.
உணவுப்பொருள் தயாரிப்பாளர்களின் விருப்பத்தின் பேரிலேயே அக்மார்க் முத்திரை வழங்கப்படுகிறது. இந்தியாவில் 223 வகையான உணவுப்பொருட்களுக்கு அக்மார்க் முத்திரை வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் தான் அதிகம்
இந்தியாவில் மொத்தம் 1300 உணவு தயாரிப்பாளர்கள் அக்மார்க் முத்திரை பெற்றுள்ளனர். தமிழகத்தில் தான் உணவுப்பொருளின் தரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து 1100 பேர் அக்மார்க் முத்திரை பெற்றுள்ளனர். மதுரையில் மட்டும் 91 பேர் உள்ளனர். 223 வகையான உணவுப்பொருட்கள் பட்டியலில் அரிசி மாவு, கேழ்வரகு மாவை மட்டும் மத்திய அரசு சேர்க்கவில்லை.
தமிழகத்தில் ஏராளமானோர் அரிசி மாவு, கேழ்வரகு மாவு, கம்பு மாவு, சிறுதானிய மாவு தயாரித்து விற்பனை செய்கின்றனர். இவற்றுக்கான மக்கள் வரவேற்பும் அதிகமாக உள்ளது. எனவே இந்த மாவு வகைகளுக்கு அக்மார்க் முத்திரை வேண்டுமென உணவு தயாரிப்பாளர்கள், கடந்த பத்தாண்டுக்கு மேலாக மத்திய அரசை வலியுறுத்துகின்றனர்.
வடமாநிலங்களில் இருந்து கடலைபருப்பை பெற்று அதை அரைத்து மாவாக்கி விற்பனை செய்யும் போது அக்மார்க் முத்திரை பெற முடிகிறது. இங்கேயே அதிகம் விளையும் அரிசியை மாவாக்கி விற்றால் அக்மார்க் முத்திரை கிடைப்பதில்லை. தற்போது பாரம்பரிய அரிசி ரகங்கள், சிறுதானிய ரகங்கள் மாவாக்கப்பட்டு சந்தையில் வரவேற்பை பெறுவதால், உலக சிறு தானிய ஆண்டு கொண்டாடப்படும் இந்நேரத்தில், அக்மார்க் உணவுபட்டியலில் இவற்றையும் சேர்க்க மத்திய அரசு முன்வரவேண்டும்.