புதுடில்லி: இந்த ஆண்டு ஒன்பது மாநிலங்களின் சட்டசபை தேர்தலுக்கும், அடுத்த ஆண்டு துவக்கத்தில் லோக் சபா தேர்தலுக்குமான பணிகளை தேர்தல் கமிஷன் சுறுசுறுப்பாக செய்து வரும் நிலையில், ஓட்டுப் பதிவு சதவீதத்தை அதிகரிக்கச் செய்யவும் முயற்சித்து வருகிறது.இது குறித்து தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
ஓட்டுப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதில் ஒன்றாக, சுபாஷ் காய் பவுண்டேஷன் உடன் இணைந்து, 'நான் ஒரு இந்தியன்; நாங்கள் இந்தியாவின் வாக்காளர்கள்' என்ற அர்த்தத்திலான பாடலை தேர்தல் குழு உருவாக்கி உள்ளது. இந்த பாடல் காட்சியில், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறை பிரபலங்கள் தோன்றி, தேர்தலில் ஓட்டளித்து அரசியலமைப்பு கடமையை ஆற்றுமாறு பொதுமக்களிடம் கேட்கின்றனர்.
சமூக வலைதளங்களில், ஹிந்தி மற்றும் பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட்ட இந்தப் பாடல், ஏற்கனவே ஏராளமானோரை கவர்ந்து விட்டது. இது வெளியிடப்பட்ட ஒரு வாரத்துக்குள், ௩.௫ லட்சம் பேர் பார்த்துள்ளனர்; ௫.௬ லட்சம் பேர் கவரப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.