கோவை அருகே மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று 'கோவிந்தா' கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர்.
கோவை மாவட்டம், அன்னுார் அடுத்து 'மேலத்திருப்பதி' என்று அழைக்கப்படும் மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவில், 400 ஆண்டுகள் பழமையானது. இங்கு, 56வது ஆண்டு தேர்த்திருவிழா கடந்த, 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் இரவு, சிம்மம், கருடன், புஷ்பகம் என, பல்வேறு வாகனங்களில் பெருமாள் திருவீதி உலா நடந்தது. நேற்று காலை, 5:30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக வெங்கடேச பெருமாள் தேருக்கு எழுந்தருளினார். மதியம், 12:10க்கு தேரோட்டம் துவங்கியது.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேரின் மீது பக்தர்கள், நிலக்கடலை, பருத்தி, பழம், எலுமிச்சை ஆகியவற்றை வீசி கோவிந்தா, கோவிந்தா, என பக்தி கோஷம் எழுப்பினர். மதியம், 2:30க்கு தேர் நிலையை அடைந்தது. தேருக்கு முன்னதாக ஜமாப் குழுக்களின் இசைக்கு ஏற்ப பக்தர்கள் நடனம் ஆடியபடி சென்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று இரவு குதிரை வாகனத்தில் பெருமாள் உலாவும், நாளை இரவு சேஷ வாகனத்தில் தெப்பத்தில் பெருமாள் உலாவும் நடக்கிறது.