பல்லடம்: முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்தினர் வசிக்கும் வீட்டு கேட் மீது ஏறி குதித்து பல்லடம் போலீசார் விசாரித்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம், ஜெ.கே.ஜெ., காலனியை சேர்ந்தவர் பால்ராஜ்; முன்னாள் ராணுவ வீரர். பால்ராஜ் இறந்த பின், இவரது மனைவி, மகள் ஆகியோர் வீட்டில் தனியாக வசிக்கின்றனர். பெங்களூருவில் வேலை பார்க்கும் இவரது மகன், அவ்வப்போது பல்லடம் வந்து செல்வது வழக்கம்.
பால்ராஜின் உறவினர் ஒருவர் மீது பண மோசடி வழக்கு உள்ளது. இதுதொடர்பான விசாரணைக்கு வந்த பல்லடம் குற்றப்பிரிவு போலீசார், பால்ராஜ் வீட்டின் கேட் மீது ஏறி குதித்து விசாரித்த காட்சிகள் அங்குள்ள 'சிசிடிவி'யில் பதிவாகி உள்ளது. அருகில் வசிப்போர் கூறுகையில்,'பெண்கள் தனியாக உள்ள வீட்டில் அதிகாலை நேரத்தில் கேட் மீது ஏறி குதித்து, போலீசார் விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன? உறவினர் இங்கு வந்து செல்வதாக சந்தேகித்தால் 'சிசிடிவி' காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு இருக்கலாம்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய போலீசாரே இவ்வாறு விதிமீறி விசாரணை மேற்கொள்ளலாமா' என்றனர். பல்லடம் டி.எஸ்.பி., சவுமியாவிடம் கேட்டபோது, இதுகுறித்து விசாரிப்பதாக தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement