\திருப்பூர்: சர்வர் கோளாறு காரணமாக மாநிலம் முழுவதும் நேற்று காலை இ-சேவை மையங்கள் முடங்கின.
தமிழக தகவல் தொழில்நுட்ப துறையின் மின் ஆளுமை முகமை இ-சேவை மையங்களை செயல்படுத்திவருகிறது. அரசு கேபிள் 'டிவி' நிறுவனம், கூட்டுறவு சங்கம், மகளிர் குழு உட்பட பல்வேறு முகமைகளின் கீழ், மாவட்டம்தோறும் இ-சேவை மையங்கள் இயக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இ-சேவை மையங்கள் உள்ளன.
வருமான வரி சான்று, ஜாதி சான்று, இருப்பிட சான்று என பல்வேறு வகை சான்றுகள் பெறுவதற்கும், திருமண உதவி உள்பட ஏராளமான நல உதவிகளை பெறுவதற்காக விண்ணப்பிப்பதற்கும், பொதுமக்கள் இ-சேவை மையங்களை நாடுகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில், 450 இ-சேவை மையங்கள் உள்ளன. நேற்று காலை, 10:00 மணிக்கு வழக்கமான இயக்கத்தை துவக்கிய சில நிமிடங்களிலேயே இணையதள சிக்கல்களால் இ-சேவை மைய இயக்கம் முடங்கியது.'லாகின்' செய்ய முடிந்தபோதும், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய முடியவில்லை.
இப்பிரச்னை இரண்டு மணி நேரம் வரை நீடித்தது. மதியம், 12:00 மணிக்கு பின்னரே இயல்புநிலை திரும்பியது. இதனால், பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. மின் ஆளுமை முகமை பிரிவினர் கூறுகையில், 'தமிழகம் முழுவதும் இன்று(நேற்று) காலை, இ-சேவை மைய இயக்கம் முடங்கியது. பிரச்னைகள் விரைந்து களையப்பட்டு, இ-சேவை மீண்டும் செயல்படத் துவங்கியது' என்றனர்.