சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்த பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம்(78), வீட்டில் வழுக்கி விழுந்ததில் உயிர் இழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு பிரபலங்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் உண்டோ அத்தனையும் பாடி நம்மையெல்லாம் மகிழ்வித்த இசைக்குயில் வாணி ஜெயராம் அவர்கள் மறைவுச் செய்தி மனத்துயர் அளித்தது. இந்தியாவின் இதய கமலமாக, பத்மபூஷன் என்று வாழும் காலத்தில் விருது வழங்கிக் கொண்டாடப்பட்ட வாணி ஜெயராம் அவர்களின் இழப்பு இசை உலகின் பேரிழப்பு. அவரின் ஆன்மா அமைதி பெற வேண்டுகிறேன். ஓம் சாந்தி!
புதுச்சேரி கவர்னர் தமிழிசை
பழம்பெரும் பிரபல திரைப்பட பின்னணி பாடகி வாணி ஜெயராம் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியையும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது. தனது இனிமையான குரல் வளத்தால் அனைவரின் மனதிலும் இடம் பிடித்த அவரது இழப்பு, இசை ரசிகர்களுக்கு பேரிழப்பு
எடப்பாடி பழனிசாமி
திரைப்பட பின்னணி பாடகி வாணி ஜெயராம் உயிரிழந்த செய்தி மிகுந்த மன வேதனையை தருகிறது.
அமமுக பொதுச்செயலாளர் தினகரன்
வசீகரிக்கும் குரலால் தமிழர்களின் மனதைக் கட்டிப் போட்ட பிரபலப் பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உற்றார், உறவினர் மற்றும் ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

தீனா (இசையமைப்பாளர்)
இது மிகவும் வருத்தமான செய்தி. இவர்களை இளவரசி என்று சொல்லலாம். இசை சங்கத்திற்கு பெரிதும் உறுதுணையாக இருந்தவர். கடந்த இரு வாரங்களுக்கு முன் பத்ம பூஷன் விருது மத்திய அரசு அறிவித்தது. அவர்களுடைய ஆன்மா சாந்தி அடையட்டும்.
தேவா(இசையமைப்பாளர்)
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலச்சுப்பிரமணியன் மறைவில், எற்பட்ட புண் இன்னும் ஆறவில்லை. அதற்குள் வாணி ஜெயராமின் மறைவு வருத்தமளிக்கிறது. அவர் ரொம்ப நல்லவர். நான் மனதுயரத்தில் இருக்கிறேன். அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்.
புஷ்பவனம் குப்புசாமி (பாடகர்)
மனதில் பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இனிமையாக பாடக்கூடிய பாடகி. எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருப்பார். பாடகிக்கு உரிய லட்சணம் பெற்றவர். அவரின் உடல் நம்மை விட்டு போகிறது. ஆனால் அவர் பாடிய பாடல் உயிர்தான். அது காலம் காலமாக நம்மிடம் வாழ்ந்து கொண்டிருக்கும்.
பாக்யராஜ்(இயக்குனர்)
தாங்க முடியாத செய்தி. ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிராத்தனை செய்ய வேண்டும். எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.
வேல்முருகன்(பாடகர்)
மீள முடியாத துயரம். வெளிநாடுகளில் அவருடன் பயணம் செய்து, பாடல் பாடிய நிகழ்வு மனதில் ஞாபகம் வருகிறது. இது மிக பெரிய இழப்பு. மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது.
மனோபாலா (இயக்குனர்)
இவர் 14 மொழியில் பாடல் பாடியவர். தெலுங்கு உள்ளிட்ட பாடல்களுக்கு தேசிய விருது வாங்கியுள்ளார். சரஸ்வதி போன்றவர் தான் வாணி அம்மா. அவரின் குரல் தெய்வீகமானது. திரையுலகில் 20 நாட்களாக இறப்பு செய்தி வந்து கொண்டிருப்பது மன வேதனை அளிக்கிறது. இனி அவர்களின் பாடல் மட்டும் தான் கேட்க முடியும். அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ம.நீ.ம தலைவர் கமலஹாசன்
வார்த்தைகளுக்குப் பதவி உயர்வு கொடுப்பது போன்றதொரு அரிய பாணியில் எத்தனையோ பாடல்களை உலகுக்குப் பரிசளித்த பறவையாக வாழ்ந்த வாணி ஜெயராம் அம்மையார் அமைதியடைந்திருக்கிறார். அவர் பாடல்கள் நம்மிடம் இருக்கும். அவருக்கென் அஞ்சலி.என தெரிவித்து உள்ளார்.