Vani Jayaram: Heroine of Seven Swaras; A singer who captivated the heart of Tamils | வாணி ஜெயராம்: ஏழு ஸ்வரங்களின் நாயகி: ஏழு கோடி தமிழரின் பாடகி| Dinamalar

வாணி ஜெயராம்: ஏழு ஸ்வரங்களின் நாயகி: ஏழு கோடி தமிழரின் பாடகி

Updated : பிப் 04, 2023 | Added : பிப் 04, 2023 | கருத்துகள் (8) | |
சென்னை : ‛மீரா ஆப் மாடர்ன் இந்தியா' என்று அழைக்கப்படும் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) சென்னையில் காலமானார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய இந்த சாதனை பெண்மணியின் சினிமா பயணத்தை பார்க்கலாம்.இசைப்பயணம்கலைவாணி என்ற இயற்பெயர் கொண்ட பின்னணி பாடகி வாணி ஜெயராம் தமிழகத்தில் வேலூரை பிறப்பிடமாக கொண்டவர்.
Vani Jayaram: Heroine of Seven Swaras; A singer who captivated the heart of Tamils  வாணி ஜெயராம்: ஏழு ஸ்வரங்களின் நாயகி: ஏழு கோடி தமிழரின் பாடகி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : ‛மீரா ஆப் மாடர்ன் இந்தியா' என்று அழைக்கப்படும் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) சென்னையில் காலமானார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய இந்த சாதனை பெண்மணியின் சினிமா பயணத்தை பார்க்கலாம்.


இசைப்பயணம்


கலைவாணி என்ற இயற்பெயர் கொண்ட பின்னணி பாடகி வாணி ஜெயராம் தமிழகத்தில் வேலூரை பிறப்பிடமாக கொண்டவர். 1945ல் நவம்பர் 30ம் தேதி பிறந்தார். இவர் உடன் பிறந்தவர்கள் ஐந்து சகோதரிகள், மூன்று சகோதரர்கள். சிறுமியாக இருந்தபோதே இவருடைய தாயார் பத்மாவதி இவரை 'ரங்கராமானு ஐயங்கார்' என்பவரிடம் வாய்ப்பாட்டு பயிற்சிக்காக சேர்த்து விட அவரிடம் முத்துசாமி தீக்ஷிதரின் கீர்த்தனைகளை கற்றறிந்தார்.

பின்னர் கர்நாடக இசையை கடலூர் ஸ்ரீனிவாச ஐயங்கார்', 'டிஆர் பாலசுப்ரமணியம்' மற்றும் 'ஆர்எஸ்மணி' ஆகியோரிடம் கற்றுத் தேர்ந்தார். தனது 8வது வயதில் அகில இந்திய வானொலியில் முதல் இசை நிகழ்ச்சியை வழங்கினார். வாணி ஜெயராம் சென்னை குயின் மேரீஸ் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.


latest tamil news




வங்கி பணியாளர்


பாடலில் ஆர்வம் கொண்ட வாணி ஜெயராம் தனது முதல் பணியாக சென்னை பாரத ஸ்டேட் வங்கியில் பணியாளராக பணிபுரிந்தார். திருமணத்திற்கு பின் 60களின் பிற்பகுதியில் மும்பைக்கு இடம் பெயர்ந்தார்.

மும்பை ஸ்டேட் வங்கியின் கிளையில் பணிபுரிந்த சமயத்தில் இவரது இசை ஆர்வத்தை அறிந்த இவரது கணவர் ஜெயராம் இவரை ஹிந்துஸ்தானி இசை பயில வலியுறுத்தி அதன் வாயிலாக 'உஸ்தாத் அப்துல் ரஹ்மான் கான்' என்பவரிடம் பயின்றார்.

தனது விடாப்பிடியான, கடுமையான பயிற்சிக்குப் பின் 1969ம் ஆண்டு முதல் இசை நிகழ்ச்சியை பொது மேடையில் நடத்தினார்.


திரைவானில் அறிமுகம்


இதற்குப் பிறகு, வங்கிப் பணியிலிருந்து விடுபட்டு இசையை முழு நேரப் பணியாக மாற்றிக் கொண்டார். இதே காலக்கட்டத்தில் புகழ் பெற்ற ஹிந்தி இசை அமைப்பாளர் 'வசந்த் தேசாய்' அறிமுகம் கிடைக்க, அவர் இசை அமைப்பில் வெளிவந்த மராத்தி ஆல்பம் ஒன்றில் பாடகர் குமார் கந்தர்வ் என்பவரோடு ஜோடி சேர்ந்து பாடும் வாய்ப்பும் கிடைத்தது.

அதன் தொடர்ச்சியாக 1971ல் வசந்த் தேசாய் இசை அமைப்பில் இயக்குநர் ரிஷிகேஷ் முகர்ஜியின் இயக்கத்தில் வெளிவந்த "குட்டி" என்ற திரைப்படத்தில் இவருடைய குரலில் வந்த "போலே ரே பப்பி ஹரா" என்ற பாடல் இவருக்கு பின்னணிப் பாடகி அந்தஸ்தை கொடுத்ததோடு மட்டுமின்றி இவருடைய திரையிசைப் பயணத்தில் திருப்புமுனையாகவும் அமைந்தது.


latest tamil news




தமிழ் அறிமுகம்


தமிழில் 1973ல் எஸ்எம் சுப்பையா நாயுடுவின் இசையில் "தாயும் சேயும்" என்ற படத்தில் தனது முதல் பாடலை பாடினார். ஆனால் அந்தப் படம வெளிவரவில்லை. அதே ஆண்டு இசை அமைப்பாளர்கள் சங்கர் கணேஷ் இசையில் வெளிவந்த "வீட்டுக்கு வந்த மருமகள்" என்ற திரைப்படத்தில் பாடகர் டிஎம் சௌந்தர்ராஜன் உடன் சேர்ந்து 'ஓரிடம் உன்னிடம் நான் கேட்பது' என்ற பாடலை பாடினார். தமிழில் இவரது குரலில் வெளிவந்த முதல் திரைப்பட பாடல் இது.


திருப்பம் தந்த ‛மல்லிகை என் மன்னன் மயங்கும்'


இதனைத் தொடர்ந்து கே பாலசந்தர் இயக்ததில் எம்எஸ் விஸ்வநாதன் இசை அமைப்பில் வெளிவந்த "சொல்லத்தான் நினைக்கிறேன்' படத்தில் இவர் பாடியிருந்தாலும் எம்எஸ் விஸ்வநாதன் இசை அமைப்பில் வெளிவந்த "தீர்க்க சுமங்கலி" என்ற படத்தில் இவர் பாடிய 'மல்லிகை என் மன்னன் மயங்கும்' என்ற பாடல் தான் இவரை தமிழ் திரையிசையில் வெகுவாக பேச வைத்தது.

மீண்டும் 1975ம் ஆண்டு கே பாலசந்தர், எம்எஸ் விஸ்வநாதன் மற்றும் கண்ணதாசன் கூட்டணியில் வெளிவந்த "அபூர்வ ராகங்கள்" என்ற திரைப்படத்தில் இவர் பாடிய 'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்' என்ற பாடல் இவருக்கு தேசிய விருதினை பெற்றுத் தந்தது.


latest tamil news




எம்எஸ்வி டூ ஏஆர்ஆர்


இவர் இசை அமைப்பாளர் இளையராஜாவின் இசை அமைப்பில் பாடிய முதல் பாடல் 1977ம் ஆண்டு இயக்குநர் எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த "புவனா ஒரு கேள்விக்குறி" என்ற படத்தில் பாடகர் பி ஜெயச்சந்திரனோடு இணைந்து பாடிய 'பூந்தென்றலே' என்ற பாடலாகும். அதன் பின் இளையராஜாவின் இசையமைப்பில் வெளிவந்த பல படங்களில் பல வெற்றிப் பாடல்களை தந்திருக்கின்றார்.

தமிழில் எம்எஸ் விஸ்வநாதன், கேவி மஹாதேவன், சங்கர் கணேஷ், ஜிகே வெங்கடேஷ், வி குமார் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் போன்ற இசை ஜாம்பவான்களின் இசையில் ஏராளமான பாடல்களை பாடிய வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் ஏஆர் ரஹ்மானின் இசை அமைப்பிலும் "வண்டிச்சோலை சின்ராசு" என்ற படத்தில் பாடியிருக்கின்றார்.


10ஆயிரம் பாடல்கள்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, ஒரியா, குஜராத்தி மற்றும் பெங்காளி என பல்வேறு மொழிகளிலும் 10,000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். ஏராளமான பக்திப் பாடல்களும் தனி ஆல்பங்களாக இவரது குரலில் வெளிவந்திருக்கின்றன.


latest tamil news




விருதுகள்


1975ல் சிறந்த பின்னணிப் பாடகிக்கான "தேசிய விருது" 'அபூர்வ ராகங்கள்' திரைப்படத்திற்காக வழங்கப் பட்டது.
1980ல் சிறந்த பின்னணிப் பாடகிக்கான "தேசிய விருது" 'சங்கராபரணம்' என்ற தெலுங்கு திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.
1991ல் சிறந்த பின்னணிப் பாடகிக்கான "தேசிய விருது" 'சுவாதி கிரணம்' என்ற தெலுங்கு திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.
1980 ல் சிறந்த பின்னணிப் பாடகிக்கான "பிலிம் பேர் விருது" 'மீரா' என்ற ஹிந்தி திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.
1972ல் சிறந்த பின்னணிப் பாடகிக்கான "குஜராத் மாநில அரசு விருது" "கூங்கட்" என்ற திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.
1979ல் சிறந்த பின்னணிப் பாடகிக்கான "தமிழக அரசு விருது" "அழகே உன்னை ஆராதிக்கிறேன்" என்ற திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.
1979ல் சிறந்த பின்னணிப் பாடகிக்கான ஆந்திர அரசின் "நந்தி விருது" "சங்கராபரணம்" திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.
1982ல் சிறந்த பின்னணிப் பாடகிக்கான "ஒரிசா மாநில சினிமா விருது" "தேப்ஜானி" என்ற திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.
1991ல் தமிழ் திரை இசையில் இவர் ஆற்றிய பணிக்காக தமிழக அரசு "கலைமாமணி விருது" வழங்கி கவுவித்தது.
2012ல் தென்னகத்திற்கான "பிலிம் பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது" வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
2023ம் பத்ம விபூஷண் விருது அறிவிப்பு

வாணி ஜெயராமின் கணவர் ஜெயராம். இவர் கடந்த 2018ம் ஆண்டே மறைந்துவிட்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. சென்னையில் வசித்து வந்த வாணி ஜெயராமிற்கு சமீபத்தில் குடியரசு தின விழாவின்போது தான் மத்திய அரசு பத்ம பூஷண் விருது அறிவித்தது. ஆனால் அந்த விருதை பெறும் முன்பே அவர் மறைந்தது திரை ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வாணி ஜெயராம் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.


வாணி ஜெயராம் சில துளிகள்...


தமிழ் திரையிசை பாடகர்களில் அதிகமான மொழிகளில்(19 மொழி) பாடிய பெருமைக்குரியவர் வாணி ஜெயராம்.


எந்த மொழி பாடலாக இருந்தாலும் அந்த மொழியின் தன்மை, பொருள் சிதையாமல் பாடும் வல்லமை படைத்தவர்.


கா்நாடக சங்கீத பாடல்களாக இருந்தாலும் சரி, கிராமிய, மேற்கத்திய... என எந்தவகை இசை பாடல்களாக இருந்தாலும் அந்த இசையின் ராக லட்சணங்கள் முழுவதையும் புரிந்து பாடும் அற்புதமான பாடகி இவர். உதாரணமாக : ‛‛நாதம் எனும் கோவிலிலே.... நித்தம் நித்தம் நெல்லு சோறு... வா வா பக்கம் வா...''


பெரும்பாலான பாடகர்கள் இசையமைப்பாளர்கள் சொல்வதை அப்படியே தங்களின் குரல் மூலம் பாடும் தன்மையை உடையவர்களாக இருந்தனர். சில பாடகர்கள் மட்டுமே சொந்த சந்ததியை போடுவார்கள். அது இசையமைப்பாளர்களுக்கும் பிடித்தமானதாக இருக்கும். அப்படிப்பட்டவர் வாணி ஜெயராம் என ஒரு பேட்டியில் இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதனே கூறியுள்ளார்.


புன்னகை மன்னன் படத்தில் வரும் கவிதை கேளுங்கள் என்ற பாடலை இசையமைப்பாளர் இளையராஜா மெட்டு போட்டு உருவாக்கி விட்டார். ஏறக்குறைய இரண்டு மூன்று ராகங்களை உள்ளடக்கிய இந்த பாடலை யாரை பாட வைக்க வேண்டும் என்று யோசித்தபோது வாணி ஜெயராம் தான் பொருத்தமாக இருப்பார் என முடிவெடுத்து, அவரது எதிர்பார்ப்பை 100 சதவீதம் பூர்த்தி செய்யும் விதமாக ஒரே டேக்கில் பாடி அசத்தினார்.


தமிழில் சிங்கிள் டேக் சிங்கர் என பெயரெடுத்த பெருமைக்குரிய பாடகி வாணி ஜெயராம் மட்டுமே.


வாணி ஜெயராம் பாடகி என்பது மட்டுமே வெளியுலகிற்கு தெரிந்த விஷயம். ஆனால் அவர் ஒரு மிகப்பெரிய ஓவிய கலைஞர் ஆவார். நிறைய புகைப்படங்களை அவர் வரைந்து வைத்துள்ளார். சினிமாவிற்கு வராமல் இருந்திருந்தால் ஓவியராக கூட பெயர் எடுத்து இருப்பார்.


கடவுள் சரஸ்வதி தேவியின் பூரண அருள் பெற்ற ஒரு பின்னணி பாடகி வாணி ஜெயராம் என்றால் மிகையல்ல.


ஒருமுறை தினமலருக்கு அளித்த பேட்டியில் நீங்கள் பிறந்த சமயத்தில் குழந்தை அழும் குரலை கேட்டு உங்களுக்கு வாணி என பெயர் வைத்தார்களா என கேட்டதற்கு... ‛‛போன பிறவியில் முருகனுக்கு தேனால் அபிஷேகம் செய்திருப்பேன் என நினைக்கிறேன். அதனால் இப்படி ஒரு பெயரும், புகழும் கிடைத்தது'' என்றார்.


எம்எஸ் விஸ்நாதன் இசையில், ‛‛மல்லிகை என் மன்னன் மயங்கும்... ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்.... மல்லிகை முல்லை பூ பந்தல்... எங்கிருந்தோ குரல் வந்தது...'', சங்கர் - கணேஷ் இசையில் ‛‛மேகமே மேகமே... யாரது யாரது சொல்லாமல் நீ எங்கு போவது...'', இளையராஜா இசையில் ‛‛நீ கேட்டால் நான் மாட்டேன்... என்னுளில் எங்கோ... கவிதை கேளுங்கள்... நானே தானா யாரோ தானா....'' இது போன்று பல ஜம்பவான்களின் இசையில் கொடுத்த அத்தனை பாடல்களும் காவிய பாடல்கள் என்பது நிச்சயமான ஒன்று.


முதல் ஹிந்தி வாய்ப்பு தந்த இசையமைப்பாளர் வசந்த் சேதாய் மற்றும் தமிழில் இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்நாதன் ஆகிய இருவர் மீது தனது வாழ்நாள் முழுக்க மிகுந்த மரியாதையும், பக்தியும் கொண்டவராகவே இருந்து வந்தார் வாணி ஜெயராம்.


டிஎம் சவுந்தர்ராஜன் முதல் எஸ்பிபி, மனோ வரை ஏராளமான பின்னணி பாடகர்களுடன் இவர் இணைந்து பாடி உள்ளார்.


ஒரு ஆணின் வெற்றிக்கு பின் ஒரு பெண் இருப்பார் என்பது உலக வழக்கம். ஆனால் இவரது ஒவ்வொரு வெற்றிக்கு பின்னால் இருந்தது இவரது கணவர் மறைந்த ஜெயராம் தான். மனைவிக்காக தன் பணியையும் துறந்து அவருடைய சந்தோஷம், வளர்ச்சி, முன்னேற்றத்திற்காக தனது வாழ்நாள் முழுதும் தொடர்ந்து பயணித்தவர்.


வாணி ஜெயராமின் குரலில் மிகவும் தனித்துவம் வாய்ந்தது. அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்பதே கலையுலகை சாந்தோருக்கும், அவரது கோடா கோடி ரசிகர்களுக்கும் தெரிந்த ஒன்று.


வாணி ஜெயராம் மறைந்தாலும் அவர் தந்த திரையிசை பாடல்கள் காலத்தால் அழியாமல் என்றும் மக்கள் மனதில் ரிங்காரமாய் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X