லட்சுமி வெங்கடேஸ்வரா சுவாமி திருக்கல்யாணம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே உள்ள பூதிமுட்லு கிராமத்தில், லட்சுமி வெங்கடேஸ்வரா கோவில் பிரம்மோற்சவ நிகழ்ச்சி வரும், 5ல் நடக்க உள்ளது. இதன் ஒரு பகுதியாக நேற்று லட்சுமி வெங்கடேஸ்வரா சுவாமிகளின் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் இக்கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்த கொண்டனர். இரவு சுவாமி மணக்கோலத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தீப்பிடித்து எரிந்த 'புல்லட்'
கிருஷ்ணகிரி: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த எண்டப்பட்டியை சேர்ந்தவர் அன்பழகன், 42; இவர், கடந்த, 1ல், காவேரிப்பட்டணம் அடுத்த மாட்டுவாயன்கொட்டாயில் தன் புல்லட்டை நிறுத்தியுள்ளார். அப்போது, திடீரென புல்லட்டிலிருந்து புகை வந்து தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து அன்பழகன் புகார்படி, காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தம்பதியர் மாயம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த, எண்ணேகொள்புதுாரை சேர்ந்தவர் சுரேஷ், 26; இவரது மனைவி அனிதா, 23; இவர்களுக்கு திருமணமாகி, 2 ஆண்டுகளாகிறது. கடந்த, 1 மாதத்திற்கு முன் கணவருடன் ஏற்பட்ட பிரச்னையில், அவரை பிரிந்த அனிதா, தொட்ட திம்மனஹள்ளியில் உள்ள அவரது சகோதரர் வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த, 1ல், அனிதாவிடம், சுரேஷ் போனில் பேசியுள்ளார். அதன்பின், இருவரையும் காணவில்லை. அவர்களின் மொபைல் போன்களும், 'சுவிட்ச் ஆப்'ல் உள்ளது. அனிதாவின் சகோதரர் புகார்படி, குருபரப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
நாளை டாஸ்மாக் 'லீவு'
கிருஷ்ணகிரி: 'கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும்' என கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை: வடலுார் ராமலிங்கர் நினைவு தினத்தையொட்டி நாளை, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட வேண்டும். உத்தரவை மீறி மதுக்கடைகளை திறந்தாலும், விற்பனை செய்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
ரூ.1.85 லட்சத்தில் கல்வி உதவித்தொகை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., ராஜேஸ்வரி தலைமை வகித்தார். முன்னாள் படைவீரர்களிடமிருந்து, 16 மனுக்களை பெற்றுக்கொண்ட அவர், உரிய நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, முன்னாள் படைவீரர்கள் தொகுப்பு நிதியிலிருந்து, 9 பேருக்கு, ஒரு லட்சத்து, 85 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கல்வி உதவித்தொகைக்கான காசோலைகளை வழங்கினார். முன்னாள் படைவீரர் நல துணை இயக்குனர் வேலு, துணை கலெக்டர் (பயிற்சி) தாட்சாயினி, தாசில்தார் குருநாதன், பி.டி.ஓ., வேடியப்பன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கி.கிரியில் சாரல் மழை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் இருண்டு காணப்பட்டது. பனிப்பொழிவும் விலகாமல் இருந்தது. இதனால் காலை முதல் லேசான சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. சூரியன் அரை மணி நேரம் மட்டுமே தோன்றியதால், பனி விலகாமல் மதியம் வரை சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர்.
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லுாரி, யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, நேசம் தொண்டு நிறுவனம் சார்பில், போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி, நேற்று நடந்தது. ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் எப்சிபா ஏஞ்சலா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பி.டி.ஓ., ஆபீஸ் முன் தொடங்கிய பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக, போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முழக்கமிட்டு, ஊர்வலமாக சென்றனர். இதில் நேசம் குணசேகரன் மற்றும் மாணவ, மாணவியர், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
முதல்வர் கோப்பை கிரிக்கெட் துவக்கம்
அரூர்: அரூர் சிறு விளையாட்டரங்கில், முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி, நேற்று துவங்கியது. போட்டியை டவுன் பஞ்., தலைவர் இந்திராணி துவக்கி வைத்தார். துணை தலைவர் தனபால், உடற்கல்வி ஆசிரியர் பழனிதுரை உட்பட, பலர் பங்கேற்றனர். பள்ளி மற்றும் கல்லுாரி ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் என, பிப்., 6 வரை போட்டிகள் நடக்கின்றன.