சேலம்: சேலம் ரயில்வே கோட்டத்துக்கு நடப்பு பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்களுக்கு, 345 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ரயில்வே பட்ஜெட் குறித்த ஆன்லைன் ஆலோசனை கூட்டம், சேலம் கோட்ட அலுவலகத்தில் நேற்று நடந்தது. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ், தென்னக ரயில்வே மேலாளர் சிங் உள்ளிட்டோர் ஆன்லைன் மூலம், பட்ஜெட் ஒதுக்கீடு குறித்து பேட்டியளித்தனர்.
இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீனிவாஸ் கூறியதாவது:
சேலம் ரயில்வே கோட்டத்துக்கு நடப்பு பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்களுக்கு, 345 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, 70 கோடி ரூபாய் ஒதுக்கிய நிலையில், அதை விட, 5 மடங்கு அதிக தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி - மொரப்பூர் அகல ரயில்பாதை திட்டத்துக்கு கடந்த ஆண்டு, 2.50 கோடி ரூபாய் ஒதுக்கிய நிலையில், தற்போது, 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சின்ன சேலம் - கள்ளக்குறிச்சி அகல ரயில்பாதை திட்டத்துக்கு, 63.50 கோடி, ஈரோடு - பழநி அகல ரயில்பாதை திட்டத்துக்கு, 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளன.
சேலம் - மேட்டூர் இருவழிப்பாதை அமைத்து மின்தடமாக மாற்றப்பட்டுள்ளது. ஓமலுார் - சேலம் இடையே பாதுகாப்பு கமிஷனர் தலைமையில் வெள்ளோட்டம் பார்க்கப்பட்ட நிலையில், இம்மாத இறுதிக்குள் இப்பாதை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இதன்மூலம் மேட்டூர் அனல்மின் நிலையத்துக்கு நிலக்கரி தங்கு தடையின்றி ரயிலில் கொண்டு செல்ல முடியும்.
'அம்ரூத் பாரத்' திட்டத்தில், சேலம் ரயில்வே கோட்டத்தில், 15 ரயில்வே ஸ்டேஷன்களை மேம்படுத்த, முதல்கட்டமாக, 8.02 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில்வே ஸ்டேஷன்களை சீரமைக்கும் திட்டத்தில், இரண்டாம் கட்டமாக கோவை ஸ்டேஷனில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. 400 முதல், 500 கோடி ரூபாய் வரை, பயணியருக்கு தேவையான அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன ஸ்டேஷனாக கோவை மாற்றப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.