இன்று பிரபல பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் காலமாகி உள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் பலநூறு பாடல்கள் பாடிப் புகழ்பெற்றவர் வாணி ஜெயராம். 78 வயதாகிய அவர், எதிர்பாராவிதமாக கீழே வழுக்கி விழுந்து காலமாகியுள்ளார். பல்வேறு விருதுகளை வென்ற அவருக்கு அவரது ரசிகர்களும் திரைத் துறையினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
வாணி ஜெயராம் இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்கள் பலரது பாடல்களைப் பாடியுள்ளார். குறிப்பாக எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் அவர் பாடிய பாடல்கள் 70,80 களில் அதிக வரவேற்பு பெற்றவை. பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தில் எம்எஸ்வி இசையில் இவர் பாடிய 'ஏழு ஸ்வரங்களில் எத்தனை பாடல்' என்கிற கிளைமாக்ஸ் காட்சிப் பாடல் ரசிகர்களிடம் அதீத வரவேற்பு பெற்றது. ரஜினியின் முதல் படமான இந்த கருப்பு வெள்ளை படத்தில் பாடகியாக நடித்த ஸ்ரீவித்யாவுக்கு வாணி குரல் கொடுத்திருப்பார். பந்துவராளி ராகத்தில் அமைந்த இந்த பாடலில் பல சிக்கலான ஸ்வர முடிச்சுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல நிழல் நிஜமாகிறது படத்தில் சுத்த சாரங்கி ராகத்தில் இவர் பாடிய 'இலக்கணம் மாறுதோ..!' பாடல் இன்றும் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் தளங்களில் புகழ்பெற்ற பாடலாகும். தீர்க்க சுமங்கலி படத்தில் இவர் பாடிய 'மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலர் அல்லவா..!' என்கிற பாடல்மூலம் வாணி ஜெயராம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
![]()
|
கர்நாடக சங்கீதத்தில் பரிச்சார்த்த முயற்சிகளுக்கு சிறந்த குரல்வளம் வேண்டும். இதற்காக இசையமைப்பாளர்கள் வாணி ஜெயராமின் குரலை பயன்படுத்தத் துவங்கினர். இதுபோன்ற நுணுக்கமான பாடல்கள் மட்டுமின்றி மெல்லிசையிலும் கலக்கி வந்தார் வாணி ஜெயராம். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிராத்திப்போம்...!