கோவை:''மக்களின் பொருளா தார மேம்பாட்டுக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முன்னோடி நாடாக இந்தியா உள்ளது,'' என, மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் தெரிவித்தார்.
மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் கோவையில் நேற்று கூறியதாவது:
மோடி, 2014ல் பிரதமராக பதவியேற்ற போது, நம் நாடு, உலகின், 10வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இருந்தது. கடந்தாண்டில் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக வளர்ச்சி அடைந்துள்ளது.
வளர்ச்சி
அமெரிக்கா, பிரிட்டன், சீனா போன்ற பெரிய நாடுகளே, கொரோனா, பண வீக்கம், வேலையின்மையால் திணறி வரும் நிலையில், இந்தியா, உலக பொருளாதாரத்தில் பிரகாசிக்கும் நாடாக இருக்கிறது.
கொரோனாவுக்கு பின், இந்தியா பற்றி உலகம் நன்கு உணர்ந்து கொண்டு உள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்தியா உலகின் மூன்றாம் பெரிய பொருளாதார நாடாக வளர்ந்து விடும்.
சுதந்திர இந்தியாவில் மிக அதிகப்படியான தொகையாக, 45 லட்சம் கோடி ரூபாய்க்கு இந்தாண்டு பட்ஜெட் போடப்பட்டுள்ளது.
ராஜிவ் பிரதமராக இருந்த காலத்தில், 100 ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்தால், 15 ரூபாய் மட்டுமே மக்களை சென்று சேரும் நிலை இருந்தது. நாட்டில், 65 ஆண்டுகளாக அதே நிலை தான் இருந்தது.
சீர்திருத்தம்
மோடி அரசு மேற்கொண்ட சீர்திருத்தம், தொழில்நுட்பத்தின் பயன்பாடு காரணமாக, 100 ரூபாய் ஒதுக்கீடு செய்தால், 100 ரூபாயும் மக்களை சென்று சேருகிறது.
ஊழல், தாமதம் இன்றி பணம் மக்களை சென்று சேர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.
மற்ற பல நாடுகளும் தொழில்நுட்பத்தை எவ்வாறு மக்கள் நலனுக்கு பயன்படுத்துவது என, இந்தியாவை பார்த்து அறிந்து கொள்ளும் நிலை இருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.