சென்னை:வெளிநாட்டு பல்கலைகள், இந்தியாவில் கிளையை துவங்க, கல்வி யாளர்கள், பேராசிரியர்கள், தங்கள் கருத்துகளை தெரிவிப்பதற்கான, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக்குழு செயலர் ரஜினிஷ் ஜெயின் வெளியிட்ட அறிவிப்பு:
தேசிய கல்விக் கொள்கையின் செயல் திட்டங்களை அமல்படுத்த, தொடர் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், வெளிநாட்டு பல்கலைகள், தங்கள் கிளையை இந்தியாவில் துவக்குவதற்கான வழிகாட்டுதல்கள் குறித்த வரைவு அறிக்கையை வடிவமைத்து, யு.ஜி.சி., சமீபத்தில் வெளியிட்டது.
அதில், பல்கலைகள் உலக அளவிலான தரவரிசையில் முதல், 500 இடங்களுக்குள் இருக்க வேண்டும். முன் அனுமதி யின்றி எந்த படிப்பையும் ரத்து செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்று உள்ளன.
இந்த வரைவு தொடர்பாக கல்வியாளர்கள், பேராசிரியர்கள் உட்பட அனைவரும், தங்கள் கருத்துகளை தெரிவிக்க, நேற்று முன்தினம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.
தற்போது, பல்வேறு தரப்பின் கோரிக்கையை ஏற்று, கருத்துகளை தெரிவிப்பதற்கான அவகாசம், பிப்., 20 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
விருப்பம் உள்ளவர்கள், ugcforeigncollaboration@gmail என்ற இ - மெயில் முகவரிக்கு, பரிந்துரைகளை அனுப்ப வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.