குவஹாத்தி:''தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு முன்னுரிமை வழங்குவதில் தான் நாட்டின் வளர்ச்சி அடங்கி இருக்கிறது,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
வடகிழக்கு மாநிலமான அசாமில் நடந்த நிகழ்ச்சியில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி பேசியதாவது:
பெண்களின் வருமானத்தை உயர்த்துவதன் வாயிலாக அவர்களுக்கு அதிகாரமளிக்க தான், மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் துவங்கப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட்டில் பெண்களின் சேமிப்புக்கான வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
இது, அசாம், நாகாலாந்து, திரிபுரா மாநிலங்களை சேர்ந்த பெண்களுக்கு பயன் அளிக்கும்.
அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள், முறையான போக்குவரத்து வசதி மற்றும் வளர்ச்சி திட்டங்கள் எதுவும் இல்லாமல், பல ஆண்டுகளாக பின்தங்கி இருந்தன. கடந்த எட்டு ஆண்டுகளாக இவற்றின் வளர்ச்சியில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது.
இங்கு சுற்றுலா வசதிகள், நவீன உள்கட்டமைப்புகள் உள்ளிட்ட பல வளர்ச்சிகளுக்கான நிதியை இந்த பட்ஜெட்டில் மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.
தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு முன்னுரிமை வழங்குவதில் தான் நாட்டின் வளர்ச்சி அடங்கி இருக்கிறது. இதை மனதில் வைத்து இந்த அரசு செயல்படும்.
இவ்வாறு பிரதமர் பேசினார்.