புதுடில்லி:புதுடில்லியிலிருந்து பீஹாருக்கு செல்ல இருந்த பயணியை, ராஜஸ்தானுக்கு அழைத்துச் சென்ற விவகாரம் குறித்து, 'இண்டிகோ' விமான நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு, சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
புதுடில்லியிலிருந்து பீஹாரின் பாட்னா செல்ல, அப்சர் ஹுசைன் என்பவர் இண்டிகோ விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார்.
ஆனால், அவர் தவறுதலாக ராஜஸ்தானின் உதய்ப்பூர் செல்லும் இண்டிகோ விமானத்தில் ஏறிச் சென்றுள்ளார். விமான ஊழியர்களும், அவரை தவறுதலாக ஏற்றியுள்ளனர்
இதை, அப்சர் ஹுசைன் உதய்ப்பூர் வந்த பின்பு தான் உணர்ந்துள்ளார். இதையடுத்து, அவர் விமான நிலைய அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.
அவர்கள், இதை இண்டிகோ விமான நிறுவனத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்றனர். பின், இந்நிறுவனம் அவரை மறுநாள் தான் பாட்னா செல்லும் விமானத்தில் அனுப்பி வைத்தது.
இது குறித்து தகவலறிந்த சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம், பயணியின் டிக்கெட்டை பரிசோதிக்காமல், அவரை வேறு விமானத்தில் அனுப்பிய சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கும்படி இண்டிகோ நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.