சென்னை:மின் கம்பங்களில் அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ள, கேபிள் 'டிவி' ஒயர்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு, பொறியாளர்களை மின் வாரியம் அறிவுறுத்திஉள்ளது.
மின் வாரியத்திற்கு சொந்தமான கம்பங்கள், சிமென்ட், இரும்பு கலவையால் செய்யப்பட்டவை. அவற்றில் எந்நேரமும் மின்சாரம் செல்வதால், ஊழியர்கள் தவிர்த்து வேறு யாரும் தொடுவதற்கு கூட அனுமதி கிடையாது.
சில தனியார் கேபிள் 'டிவி' நிறுவனங்கள், தொலைதொடர்பு நிறுவனங்கள், தங்களின் ஒயர்களை, அனுமதி இன்றி மின் வாரிய கம்பங்களில் இணைத்து எடுத்து செல்கின்றன.
முக்கிய சந்திப்புகளில் உள்ள கம்பங்களின் மேல், கேபிள் ஒயர்கள் சுருட்டி கட்டப்பட்டுள்ளன.
இதனால் கம்பங்களில் பழுது ஏற்படும்போது, அதை சரிசெய்வதற்காக ஊழியர்கள் ஏறும்போது, ஒயர்கள் காலில் சிக்கி, கீழே விழுந்து விபத்திற்கு உள்ளாகின்றனர். வெளி நபர், கம்பம் மேல் ஏறுவதால், மின் விபத்துஏற்படுகிறது.
எனவே, ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், விபத்தை தடுக்க, கம்பங்களில் அனுமதி இன்றி கட்டியுள்ள, கேபிள் 'டிவி' ஒயர்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு, பொறியாளர்களை, வாரியம் அறிவுறுத்திஉள்ளது.