அரண்வாயல்குப்பம்:திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் உள்ளது அரண்வாயல்குப்பம். இங்கு, பிரத்யூஷா தனியார் பொறியியல் கல்லுாரி உள்ளது.
இந்த கல்லூரியில், ஆந்திர மாநிலம், நெல்லுார் அருகே உள்ள காவலி பகுதியைச் சேர்ந்த மெடாரமெட்ல சரண், 18. கல்லுாரி விடுதியில் தங்கி, இ.சி.இ., முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல உணவு அருந்திய பின், விடுதி அறைக்கு மாணவர் சென்றார். நேற்று காலை வெகு நேரம் ஆகியும் கதவு திறக்கவில்லை.
இதையடுத்து, சக மாணவர்கள் சென்று ஜன்னல் வழியாக பார்த்த போது மாணவர் மெடாரமெட்ல சரண், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
கல்லுாரி நிர்வாகம் அளித்த தகவலின்படி, செவ்வாப்பேட்டை போலீசார் சென்று மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
மேலும், கல்லுாரி விடுதியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன், பூந்தமல்லி உதவி ஆணையர் முத்துவேல்பாண்டியன் மற்றும் செவ்வாப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.