திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்டது பூனிமாங்காடு, நல்லாட்டூர், அரும்பாக்கம், நெமிலி, மாமண்டூர் உள்ளிட்ட ஊராட்சிகள். இந்த ஊராட்சிகளுக்கு உட்பட்டு, 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த பகுதி மக்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வேளாண் அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம் உள்ளிட்டவற்றிற்கு திருவாலங்காடு செல்ல வேண்டி உள்ளது.
இந்நிலையில், பேருந்து சேவை இல்லாததால், 40 ஆண்டுகளாக மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
திருவாலங்காடு செல்ல தடம் எண்.97,- திருத்தணி -- திருவாலங்காடு கூட்ரோடு வழியாக, திருவள்ளூர் செல்லும் ஒரே ஒரு பேருந்து சேவை மட்டுமே உள்ளது.
அதற்கும் எங்கள் கிராமத்தில் இருந்து, 6 -- 10 கி.மீ., துாரம் ஆட்டோவிலோ, இருசக்கர வாகனத்தில் 'லிப்ட்' கேட்டு சென்னை - - திருப்பதி தேசிய நெடுஞ்சாலைக்கு சென்று, பின் பேருந்து பிடித்து செல்ல வேண்டி உள்ளது.
எனவே, பூனிமாங்காடு -- திருவாலங்காடுக்கு பேருந்து சேவை இயக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம்.
இந்த வழித்தடத்தில் பேருந்து இயக்கும் பட்சத்தில், 30 கிராம மக்கள் பயன்பெறுவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, திருவள்ளூர் பணிமனை போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஒவ்வொரு வழித்தடத்திலும் பயணியர் எண்ணிக்கை பொறுத்தே பேருந்து இயக்கப்படுகிறது. மக்களின் கோரிக்கை உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது' என்றார்.