அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள், கடந்த முறை செய்த தவறை திரும்பச் செய்யாமல், மீண்டும் அனைவரும் ஒரு கூட்டணியில் இணைந்து எதிர்த்தால் மட்டுமே, தி.மு.க.,வை வீழ்த்த முடியும். எதிர்க்கட்சிகள் இணைந்து, தி.மு.க., கூட்டணிக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பது நல்ல யோசனை.
டவுட் தனபாலு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., கூட்டணியை வீழ்த்துற எண்ணம் உண்மையாகவே உங்களுக்கு இருக்கோ, இல்லையோ... பழனிசாமியை வீழ்த்தி, எப்படியாவது, அ.தி.மு.க.,வை கைப்பற்றணும் என்ற உங்க துடிப்பு மட்டும், 'டவுட்' இல்லாமல் தெரியுது!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்னையன்: வட மாநிலங்களில், பா.ஜ., எப்படிப்பட்ட செயல்பாடுகளை எல்லாம் செய்தது; அக்கட்சியின் நட்பு ஆட்சிகள், மற்ற மாநிலங்களில் எப்படி எல்லாம் கவிழ்ந்தன; அங்கு ஆட்சிகளை, பா.ஜ., எப்படியெல்லாம் பிடித்தது என்பது மக்களுக்கு தெரியும். நாங்கள், பா.ஜ.,விடம் எச்சரிக்கையாகவே இருக்கிறோம்.
டவுட் தனபாலு: மற்ற மாநிலங்களில் எப்படியோ... ஆனா, தமிழகத்துல ஜெயலலிதா மறைவுக்கு பின், பன்னீர்செல்வம், பழனிசாமி பங்காளி சண்டைக்கு நடுவே, நான்கரை ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியை முழுசா நடத்தி முடிச்சீங்களே... அது, மத்திய பா.ஜ., அரசோட ஆதரவால தான் என்பதை, தமிழகத்துல பச்சை குழந்தையை கேட்டா கூட, 'டவுட்' இல்லாம சொல்லும்!
பத்திரிகை செய்தி: மாணவர்களுக்கு இலவச சைக்கிள்மற்றும் சீருடைகளை விரைவில் வழங்க வலியுறுத்தி,புதுச்சேரி தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், பள்ளி மாணவர்கள்போல சீருடை அணிந்து, சைக்கிளில் சட்டசபைக்கு வந்தனர். அப்போது, மாணவர்கள்போல, அவர்கள் புத்தக பையையும் தோளில் தொங்கவிட்டு வந்தனர்.
டவுட் தனபாலு: படிக்கற காலத்துல ஒழுங்கா, 'ஸ்கூல்' போகாம இருந்துட்டோமேங்கிற ஏக்கத்தை தீர்த்துக்க, ஏதோ ஒரு சாக்கு வச்சி, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சீருடை, புத்தகபையுடன் சைக்கிளில் சட்டசபைக்கு வந்திருப்பாங்களோ என்ற 'டவுட்' வருதே!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்: ஈரோடு மாவட்டம், அ.தி.மு.க.,வின் எக்கு கோட்டை. இதை எவராலும் தகர்க்க முடியாது. பழனிசாமி தலைமையில், இந்த இடைத்தேர்தலில், நாங்கள் வெற்றி எனும் இலக்கை அடையும் போது, நாடே திரும்பி பார்க்க போகிறது.
டவுட் தனபாலு: அ.தி.மு.க.,வில் உட்கட்சி பூசல் உச்சத்துல இருக்கு... கூட்டணி கட்சிகள் கழற்றிக்கிட்டு ஓடுது... இரட்டை இலை சின்னம் கிடைக்குமான்னு தெரியல... இவ்வளவு களேபரத்துக்கு நடுவுலயும், ஈரோடு இடைத்தேர்தலில், 'நாங்க தான் ஜெயிப்போம்'னு எந்த, 'டவுட்'டும் இல்லாம உங்களால எப்படி தினமும் சொல்ல முடியுது?
பா.ஜ., தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன்: '100 ஆண்டு கால கோவிலை இடித்தேன்' என, தி.மு.க., - எம்.பி., - டி.ஆர்.பாலு பெருமையுடன் கூறுகிறார். இதுபோல, 'மற்ற மதங்களின் வழிபாட்டு தலங்களை இடித்தோம்' என்று கூறவோ, அவற்றை அகற்றச்சொல்லவோ அவருக்கு தைரியம் உள்ளதா?
டவுட் தனபாலு: இவரின் ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில், ஏரி, குளங்களை ஆக்கிரமித்து, நிறைய இடங்களில் சர்ச் கட்டி இருக்கறது, இவருக்கு நல்லாவே தெரியும்... அங்கெல்லாம் இவரு எட்டிக்கூட பார்க்க மாட்டாரு... ஹிந்து கோவில்னா மட்டும் தான், டி.ஆர்.பாலு, 'டெரர்' பாலுவா மாறுவாருங்கிறதுல, 'டவுட்'டே இல்லை!
கடலோர பாதுகாப்பு குழும, ஏ.டி.ஜி.பி., சந்தீப் மிட்டல்: இலங்கை அருகில் இருப்பதால், கடல் பாதுகாப்பு பணியில் தீவிரம் காட்ட வேண்டும். மர்ம நபர்கள் ஊடுருவல், போதைப் பொருள் கடத்தலை தடுப்பதுபோன்ற, கண்காணிப்பு பணியில் தொய்வு இல்லாமல் கவனமாக செயல்பட வேண்டும். மீனவர்களிடம் கனிவாக பழகி, அன்னியர்கள் நடமாட்டம்குறித்த தகவல்களை சேகரிக்க வேண்டும்.
டவுட் தனபாலு: இலங்கையில இருந்து தினமும் சுற்றுலா வர மாதிரி, கள்ள படகில் அகதிகள் சகஜமா தமிழகத்துக்கு வந்துட்டு தான் இருக்காங்க... அவங்களையே சாவகாசமா தான், உங்க பாதுகாப்பு படையினர் வந்து பார்ப்பாங்க... இதுல கடத்தல்காரங்களையும், பயங்கரவாதிகளையும் கவனமா கண்காணித்து பிடிப்பாங்
களான்னு 'டவுட்' வருதே!