புதர் மண்டிய பள்ளி குடிநீர் தொட்டி
திருவாலங்காடு ஊராட்சிக்கு உட்பட்டது கூடல்வாடி கிராமம். இங்கு ஒருங்கிணைந்த பள்ளி வளாகத்தில் மாணவர்களின் பயன்பாட்டுக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டி, இரண்டு ஆண்டுகளாக பழுதடைந்து பயன்பாடின்றி, செடிகள் சூழ்ந்த நிலையில் உள்ளது.
இந்நிலையில், மாணவர்களின் குடிநீர் பயன்பாட்டுக்கான இந்த தொட்டியை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ். சிவராமன், கூடல்வாடி.
பன்றிகள் கட்டுப்படுத்தப்படுமா?
திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளில், 14 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பெரும்பாலான வார்டுகளில் பன்றிகள் சுற்றித் திரிகின்றன. இதனால், நோய்கள் மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படக் காரணமாகிறது.
குறிப்பாக, திருத்தணி மடம் கிராமம், காந்தி நகர், அனுமந்தாபுரம், பழைய தர்மராஜாகோவில் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பன்றிகள் நடமாட்டம் உள்ளது.
இதனால், நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து நகராட்சியில் சுற்றித்திரியும் பன்றிகளைப் பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும்.
- -க.விநாயகம், திருத்தணி.