'லீவு' கொடுக்க லஞ்சம் வாங்கும் உதவி கமிஷனர்!
''ஈரோடு இடைத்தேர்தல்ல, 'வெயிட்' காட்டலைனா, வேலைக்கு ஆவாதுன்னு புரிஞ்சுகிட்டாங்க பா...'' என்றபடியே, சூடான மெதுவடையை உள்ளே தள்ளினார் அன்வர்பாய்.
''யாரை பத்தி சொல்றீர் ஓய்...'' எனக்கேட்டார் குப்பண்ணா.
''அ.தி.மு.க., ஆட்சியில் இருந்த, 10 வருஷத்துல நடந்த இடைத்தேர்தல்களில், தே.மு.தி.க., தனிச்சு போட்டியிட்டு, ஓரளவு தங்களோட ஓட்டு வங்கியை நிரூபிச்சுச்சு...
விஜயகாந்த் உடல் நலக்குறைவால வீட்டுல முடங்கின பிறகு, தே.மு.தி.க.,வின் ஓட்டு வங்கி படுத்துடுச்சு பா...
''இதனால, தேர்தல் கூட்டணி அமைக்கும் போது, தே.மு.தி.க.,வுக்கான முக்கியத்துவம் குறைஞ்சுபோச்சு...
''இதை புரிஞ்சுகிட்ட விஜயகாந்த் மனைவி பிரேமலதா, 'ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்ல எப்படியாவது, அ.தி.மு.க.,வின் ஏதாவது ஒரு அணியை வீழ்த்தி மூன்றாவது இடத்தை பிடிக்கணும், நாம்
தமிழர் கட்சியை விட ஒரு ஓட்டாவது கூட வாங்கிடணும்'னு உறுதியா இருக்குறாங்க பா...
''இதுக்காக, மகன் விஜய பிரபாகரனுடன் ஈரோடு கிழக்கு தொகுதியில, 10 நாள் தங்கியிருந்து தெருத் தெருவா பிரசாரம் செய்யவும் திட்டம் போட்டுருக்காங்க பா...'' என்றார் அன்வர்பாய்.
''கோவையில கவுன்சிலர்களுக்கு, தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வின் மனைவி தடபுடலா விருந்து கொடுத்தாங்களாமே, எதுக்குங்க...''
எனக்கேட்டார் அந்தோணிசாமி.
''அதுவா, நான் சொல்லுதேன் வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''கோவை மாநகராட்சி நடத்தின குடியரசு தின விழாவில், மக்கள்பணியை சிறப்பா செய்த, 10 கவுன்சிலர்களை தேர்வு செஞ்சு, விருது கொடுத்தாவ... மொத்தமுள்ள அஞ்சு மண்டல தலைவர்களில், கிழக்கு மண்டல தலைவரா இருக்குற லக்குமி இளஞ்செல்விக்கும் விருது கொடுத்தாவ...
''தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திக்கோட மனைவி தாம்வே இந்த லக்குமி இளஞ்செல்வி... விருது கிடைச்சதும் ரொம்பவே, 'ஹேப்பி'யான அந்தம்மா, எல்லா கவுன்சிலர்கள், மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள், மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் என, 300க்கும் அதிகமானவங்களை அழைச்சு, தடபுடலா பிரியாணி விருந்து கொடுத்து அசத்திட்டாவ வே...'' என்றார் அண்ணாச்சி.
''வெளியில கையை நீட்டறது பத்தாதுன்னு இப்ப, 'டிபார்ட்மென்ட்' உள்ளேயே வசூலை போட ஆரம்பிச்சுட்டா ஓய்...'' என, கடைசி தகவலை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''போலீஸ் பத்தியா சொல்லுதீரு...'' எனக்கேட்டார் அண்ணாச்சி.
''ஆமா ஓய்... 'டிராபிக்'ல வேலை பார்க்கற போலீஸ்காரா இருக்காளோல்லியோ... இவாளுக்கு எப்பவுமே வேலை பளு ஜாஸ்தியாதான் இருக்கும் ஓய்... 'வெயில், மழை, புயல்'னு பார்க்காம, ரோட்டுலயே பழியா கிடப்பா...
''நாள் கிழமைன்னா கூட வீட்டுல குடும்பத்தோட இருக்க முடியாது... அதனால, ஒரு நாள், 'லீவு' கிடைச்சா கூட ரொம்பவே, 'ஹேப்பி' ஆயிடுவா ஓய்...
''இப்படி இருக்கறச்சே, வடசென்னை பகுதியில இருக்கற ஒரு உதவி கமிஷனர், போலீஸ்காராளுக்கு ஒரு நாள், 'லீவு' கொடுக்க, 2,000 ரூபாய் வசூல் பண்றார் ஓய்... இந்த அநியாயத்தை தடுக்க யாரும் இல்லியா...'' என, வருத்தப்பட்ட குப்பண்ணா, ''சரி, அந்த பாலசுப்ரமணியத்தை ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடறேன்,'' என
எழ, சபை கலைந்தது.
**********************
'தமிழின போர்வையாளர்'கள் முகமூடி அம்பலம்!
''எஸ்.ஐ.,க்கள், மன உளைச்சல்ல இருக்காவ வே...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், அண்ணாச்சி.''அவங்களுக்கு என்னப்பா பிரச்னை...'' எனக் கேட்டார்,
அன்வர்பாய்.
''தமிழக போலீஸ் துறையில, 1993ல் பணியில் சேர்ந்தவங்களை விட, 1997ல் பணியில் சேர்ந்த போலீசார், அடிப்படை சம்பளத்தில் மட்டும் கூடுதலா, 3,500 ரூபாய் வாங்குதாவ... ஒட்டுமொத்தமா, 8,000 ரூபாய் வரை கூடுதலா வாங்குதாவ வே...
''இது பத்தி, 1993ல் பணியில் சேர்ந்த, 4,500 பேர், பல முறை உயர் அதிகாரிகளிடம் சொல்லியும் பலனில்லை...
''இப்ப, எஸ்.ஐ., அந்தஸ்துல இருக்குற எல்லாரும், தங்களுக்கு பின்னால் வந்தவங்க கூடுதல் சம்பளம் வாங்குறதால, மன உளைச்சல்ல இருக்காவ... 'முதல்வர் தலையிட்டு தங்களுக்கு உரிய சம்பள உயர்வை வழங்கணும்'னு கேட்காவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.
''வீடுகள்ல விரிசல் விழுந்தும், விதிமீறல், 'கிரஷர்'களை கண்டுக்க மாட்டேங்கிறாங்க பா...'' என அலுத்தபடியே, அன்வர்பாய் விஷயத்தை தொடர்ந்தார்...
''தர்மபுரி மாவட்டம்அரூர் பகுதியில, தனியார் ஜல்லி கிரஷர்கள் செயல்பட்டு வருது... இங்க, அரசு அனுமதித்த அளவை விட, பல அடி ஆழத்துக்கு கற்களை வெட்டி எடுத்து ஜல்லி,
எம்.சாண்ட் எல்லாம் தயாரிக்கிறாங்க பா...
''ராப்பகலா தொடர்ந்து இயங்குற கிரஷர்களால, காற்று மாசுபடுவதுடன், மாவேரிப்பட்டி கிராம பகுதி வீட்டு சுவர்கள்ல விரிசல் விழுது... கற்கள் வெட்டி எடுத்த குழிகள்ல தேங்குற தண்ணீர்ல மூழ்கி,
சிறுவர்கள் இறந்து போயிடுறாங்க பா...
''விதிமீறல் கிரஷர்கள் மீது நடவடிக்கை எடுக்கணும்னு, பல முறை மக்கள் மனு கொடுத்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரப்பு கண்டுக்காததால, மனுக்கள் கிணத்துல போட்ட கல்லு மாதிரி கிடக்குது பா...'' என்றார், அன்வர்பாய்.
''எசகுபிசகா மாட்டியிருக்கா ஓய்...'' என, சிரித்தபடியே கடைசி தகவலுக்கு மாறினார், குப்பண்ணா.
''யாரு, என்ன விஷயமுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விஷயத்துல, தி.மு.க., கூட்டணியில இருக்குற, ம.தி.மு.க., - கம்யூ., - வி.சி., நிலைமையை தான் சொன்னேன்...
''தி.மு.க., கூட்டணி சார்புல போட்டியிடும், காங்., வேட்பாளர் இளங்கோவனை ஆதரிச்சு பிரசாரம் செய்ய, தி.மு.க., தலைமை உத்தரவு போட்டிருக்கு ஓய்...
''இந்த சூழல்ல, இளங்கோவனின் முந்தைய சர்ச்சை பேச்சு பதிவுகள், சமூக வலைதளங்கள்ல வேகமாக பரவிண்டு இருக்கு... குறிப்பா, இலங்கை தமிழர் விவகாரத்துல, அவர் பேசிய அடாவடி பேச்செல்லாம், இப்ப பரவுது ஓய்...
''இதனால, ஈழ தமிழர் விவகாரத்துல அப்ப ஆவேசமா கொதிச்ச, வி.சி., - ம.தி.மு.க., - கம்யூ., கட்சி தலைவர்கள், இப்ப என்ன பண்றதுன்னு தெரியாம முழிக்கறா...
''தி.மு.க., தயவு வேணுமேன்னு, இளங்கோவனுக்கு ஆதரவா பிரசாரம் பண்றதா, இல்லை, 'தமிழின' நாடகம் போட்டோமே... அதை காப்பாத்தறதான்னு தெரியாம, அக்கட்சி தலைவர்கள் திணறிண்டு இருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''அம்பலத்துக்கு வருது, 'தமிழின போர்வையாளர்'களின் முகமூடின்னு சொல்லுங்க...'' என்றபடியே அந்தோணிசாமி எழ, நண்பர்கள் கிளம்பினர்.