கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த, சாமிரெட்டி கண்டிகை, பூபால் நகர் அருகே உள்ளது பாலாஜி நகர். அங்கு, 30 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சமீபத்தில், அந்த நகரில், புதிய தார்ச்சாலை போடப்பட்டது.
அந்த குடியிருப்பு பகுதிக்குள், நேற்று காலை, மணல் லாரி ஒன்று, சென்றது. அதிக பாரம் காரணமாக, புதிய சாலை சேதமடைந்தது.
அதைக் கண்ட அப்பகுதி மக்கள், லாரியை சிறை பிடித்தனர். தகவல் அறிந்து சென்ற கும்மிடிப்பூண்டி போலீசார், மக்களிடம் சமாதானம் பேசினர்.
'அதிக பாரம் கொண்ட வாகனங்கள் நகருக்கு வரக் கூடாது' என தெரிவித்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். அதன்பின், மக்கள் லாரியை விடுவித்து கலைந்து சென்றனர்.