பெஷாவர்:பாகிஸ்தானில், இரு வேறு சம்பவங்களில் நான்கு பயங்கரவாதிகளை, அந்நாட்டு போலீசார் சுட்டுக் கொன்றனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், பயங்கர வாதிகள் நடமாட்டம் அதிகம் உள்ள கைபர்பக்துன்க்வா மாகாணம், ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது.
இங்குள்ள பெஷாவர் நகர் மசூதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில், ௧௦௦ பேர் பலியாகினர்; 200 பேர் பலத்த காயமடைந்தனர்.
போலீஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து, தெஹ்ரீக் - இ- பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு, இந்த தாக்குதலை நடத்தியது.
இந்நிலையில், சர்சத்தா மாவட்டத்தின் நிசட்டா கிராமத்தில் நேற்று முன் தினம் சென்ற போலீஸ் வேனை குறிவைத்து, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
அப்போது, இரு தரப்புக்கும் இடையே நடந்த சண்டையில், மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மற்றொரு சம்பவத்தில், இதே மாவட்டத்தின் சபரா பகுதியில் உள்ள சோதனைச் சாவடி வழியே வந்த பயங்கரவாதியை போலீசார் நிறுத்துமாறு கூறினர்.
ஆனால், அவர் திடீரென போலீசாரை நோக்கி சுட ஆரம்பித்தார். உடனே, பாதுகாப்புப் படையினர் திருப்பி சுட்டதில், அவர் அங்கேயே உயிரிழந்தார்.