வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வேலுார்:வாணியம்பாடியில், தைப்பூசத்தையொட்டி இலவச சேலை பெற டோக்கன் வாங்கிய போது கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் இறந்த சம்பவத்திற்கு காரணமான விழா ஏற்பாட்டாளர் ஐயப்பனை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி ஜின்னாபாலம் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன், 50. இவர் ஜல்லி, செங்கல் சூளை, பூளு மெட்டல், ரியல் எஸ்டேட் போன்ற தொழில்கள் செய்து வருகிறார். இவர் தைப்பூசத்தையொட்டி 2 ஆயிரம் பெண்களுக்கு இலவச சேலை, தாலி, ஆண்களுக்கு வேஷ்டி வழங்குவதாக அறிவித்தார்.
இதற்கான டோக்கன் வாணியம்பாடி சந்தை அருகே வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது சிலர் இப்போதே இலவச பொருட்கள் வழங்கப்படும் என தகவல் பரப்பினர். இதனால் ஒரே நேரத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் வந்து டோக்கன் பெற முயன்றதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.பலர் கீழே விழுந்தனர். கூட்ட நெரிசிலில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு பலர் மயக்கம் போட்டு விழுந்தனர்.
இதில் குரும்பட்டி கிராமத்தை சேர்ந்த வள்ளியம்மாள், 60, அரபாண்ட குப்பம் ராஜாத்தி, 60, திருமஞ்சோலை கிராமத்தை சேர்ந்த மல்லிகா, 60, நாகம்மா, 60,, ஆகியோர் சம்பவம் நடந்த இடத்திலேயே இறந்தனர்.வாணியம்பாடி போலீசார், தீயணைப்பு துறையினர் கூட்டத்தில் சிக்கியவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில் 16 பேர் படுகாயமைடைந்தனர். 12 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
வாணியம்பாடி போலீசார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விழா ஏற்பாட்டாளர் ஐயப்பனை கைது செய்தனர்.இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.