திருவனந்தபுரம்: நம் நாட்டில் முதல் முறையாக மூன்றாம் பாலின தம்பதி கருத்தரித்து, பெற்றோராக உள்ளனர். பெண்ணாக இருந்து ஆணாக மாறிய கேரளாவைச் சேர்ந்த சஹாத், தற்போது எட்டு மாத கர்ப்பமாக உள்ளார்.
கேரளாவின் திருவனந்தபுரத்தில் கணக்காளராக பணியாற்றி வருபவர், சாஹத், 23. இவர், பெண்ணாக பிறந்து, ஆணாக மாறியவர். இதே ஊரைச் சேர்ந்தவர் ஜியா, 21. இவர், ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர். இவர், நாட்டியக் கலைஞர்.இவர்கள் இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பு ஏற்பட்டதால், கடந்த மூன்று ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
பாலினம் மாறுவதற்காக இருவரும் அறுவை சிகிச்சை செய்து கொண்டனர். இதற்காக சாஹத்தின் மார்பகம் அகற்றப்பட்டது. ஆனாலும், அவரது கர்ப்பப்பை அகற்றப்படவில்லை. இதற்கிடையே, இருவரும் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்தனர். ஆனால், மூன்றாம் பாலினத்தவர்கள் குழந்தை பெறுவதில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல், உடல் ரீதியான பிரச்னை, சமூகத்தின் அங்கீகாரம் போன்றவற்றின் காரணமாக தயங்கினர்.
இறுதியில் இருவரும் பேசி, குழந்தை பெறுவது என முடிவு செய்தனர். இதையடுத்து, சாஹத் தற்போது எட்டு மாத கர்ப்பமாக உள்ளார்.நம் நாட்டில் பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர், கர்ப்பமாவது இது தான் முதல் முறை. சஹாத் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, ஜியா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 'ஒரு குழந்தைக்கு பெற்றோராக வேண்டும் என்ற எங்கள் கனவு, இன்னும் இரண்டு மாதங்களில் நனவாகப் போகிறது' என, சமூக வலைதளத்தில் ஜியா தெரிவித்துள்ளார்.
Advertisement