ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விவகாரத்தில், அ.தி.மு.க.,வில் பழனிசாமி - பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்ட சண்டை, உச்ச நீதிமன்ற உத்தரவால் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. 'இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கே ஆதரவு' என, பன்னீர்செல்வம் அறிவித்துள்ளதால், தன் வேட்பாளருக்கு அந்த சின்னத்தை பெற, பழனிசாமி தரப்பு பகீரத முயற்சி மேற்கொண்டுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளராக தென்னரசு போட்டியிடுவார் என, பழனிசாமி அறிவித்தார். அதற்கு போட்டியாக, செந்தில் முருகன் என்பவரை பன்னீர்செல்வம் வேட்பாளராக அறிவித்தார். இதனால், யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்தது.
சுற்றறிக்கை
'நான் கையெழுத்திடும் வேட்பாளருக்கு, இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்' என உச்ச நீதிமன்றத்தில், பழனிசாமி இடையீட்டு மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள், இடைத்தேர்தலுக்காக மட்டும் ஒரு தீர்ப்பை வழங்கினர். அதாவது, 'இடைத்தேர்தல் வேட்பாளர் யார் என்பதை, அ.தி.மு.க., பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும். அதற்காக வேட்பாளர் தேர்வு செய்வதற்கான திட்டத்தை, பொதுக்குழுவில் சுற்றுக்கு விட வேண்டும். 'பொதுக்குழு முடிவை, கட்சி அவைத் தலைவர் தேர்தல் கமிஷனுக்கு அனுப்ப வேண்டும். தேர்தல் கமிஷன் அதை ஏற்க வேண்டும்' என, உத்தரவிட்டனர்.
அதைத் தொடர்ந்து, பழனிசாமி தரப்பு, தாங்கள் அறிவித்த வேட்பாளர் தென்னரசுவுக்கு ஆதரவு திரட்ட முடிவு செய்து, அதற்கான பணிகளை நேற்று முன்தினம் இரவே துவக்கியது.
சென்னையில் நேற்று காலை, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் இருந்து, மாவட்ட செயலர்கள் வழியாக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
ஒவ்வொரு பொதுக்குழு உறுப்பினரும், 'நோட்டரி' வழக்கறிஞர் கையெழுத்தோடு, பிரமாணப் பத்திரத்தை, இன்று இரவு 7:00 மணிக்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரமாணப் பத்திரத்தில், பொதுக்குழு உறுப்பினர் பெயர், வயது, முகவரி இடம் பெற்றுள்ளது. கட்சியில் என்ன பொறுப்பு வகிக்கிறார் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
உறுதி மொழி
'ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக, சபைத் தலைவர் அனுப்பிய நோட்டீசை பெற்றுக் கொண்டேன். வேட்பாளராக தென்னரசுவை தேர்வு செய்ய, ஆதரவு தெரிவிக்கிறேன்' என, அதில் உறுதிமொழி பெறப்படுகிறது.இது தொடர்பாக, அ.தி.மு.க., அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான, அ.தி.மு.க., அதிகாரப்பூர்வ வேட்பாளரை, கட்சி பொதுக்குழு உறுப்பினர்கள், சுற்றறிக்கை வழியாக தேர்வு செய்வதற்கு, உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
அதன்படி, அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும், விரிவான சுற்றறிக்கை, நேற்று அனுப்பப்பட்டுள்ளது.பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும், சுற்றறிக்கையை முழுமையாக பூர்த்தி செய்து, இன்று இரவு 7:00 மணிக்குள், சென்னை, அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில், என்னிடம் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர்களில், 2,539 பேர் பழனிசாமிக்கும், 136 பேர் பன்னீர்செல்வத்துக்கும் முன்பு ஆதரவு தெரிவித்திருந்தனர். பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு, பழனிசாமிக்கு இருப்பதால், அவர் அறிவித்த தென்னரசு, அதிகாரப்பூர்வ வேட்பாளராக போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. அதனால், பன்னீர்செல்வம் தரப்பும், 'இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் வெற்றிக்கு பாடுபடுவோம்' என, அறிவித்துள்ளது. இதனால் பழனிசாமி - பன்னீர்செல்வம் இடையிலான 'லடாய்' தற்போதைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் கடிதத்தை பெற்று, அதை தேர்தல் கமிஷன் மற்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, வேட்பாளர் தென்னரசுக்கு இரட்டை இலை சின்னத்தை பெற, பழனிசாமி தரப்பு பகீரத முயற்சி மேற்கொண்டுள்ளது.
- நமது நிருபர் -