வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வேலுார் : வாணியம்பாடியில், தைப்பூசத்தை முன்னிட்டு, தொழிலதிபர் ஒருவரின் ஏற்பாட்டில், இலவச புடவை வழங்குவதற்காக, 'டோக்கன்' வினியோகித்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, நான்கு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்; மேலும், 16 பேர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி, ஜின்னா பாலம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன், 50; ரியல் எஸ்டேட், ஜல்லி நிறுவனம், செங்கல் சூளை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். இவர், தைப்பூசத்தையொட்டி, அப்பகுதி ஏழை பெண்களுக்கு இலவச புடவை வழங்கி வந்தார். இந்த ஆண்டு இன்று தைப்பூச திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு, 2,000 பெண்களுக்கு இலவச புடவை வழங்க ஏற்பாடு செய்தார்.
போலீசார் இல்லை
இதற்கான டோக்கன், வாணியம்பாடி சந்தை அருகே அய்யப்பனுக்கு சொந்தமான நிறுவன வளாகத்தில் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. டோக்கன் பெறுவதற்காக, வாணியம்பாடி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த கிராமங்களில் இருந்து, 2,000க்கும் மேற்பட்ட பெண்கள், அந்நிறுவன வளாகத்திற்கு முன் குவிந்தனர். இதில், 90 சதவீதம் பேர், 60 வயதுக்கு மேலான மூதாட்டியர்.
நேற்று மதியம் 2:00 மணிக்கு, டோக்கன் வழங்குவதற்காக, நிறுவனத்தின் நுழைவாயில் கதவை ஊழியர்கள் திறந்தனர். அப்போது, ஒரே நேரத்தில் பெண்கள் உள்ளே நுழைய முண்டியடித்து சென்றதால், கடுமையான நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி, பெண்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். கீழே விழுந்தவர்களை மிதித்தபடி பலர் முண்டியடித்து உள்ளே நுழைந்தனர். இதில், மிதிபட்டவர்கள் மயக்கமடைந்தும், மூச்சுத் திணறியும் உயிருக்கு போராடினர். இந்த நிகழ்ச்சிக்கு போலீசில் முன் அனுமதி பெறாததால், பாதுகாப்புக்கு, போலீசார் யாரும் அங்கு வரவில்லை. நிறுவன ஊழியர்கள் 15 பேர் மட்டுமே கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் இருந்தனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல், அவர்களும் ஓட்டம் பிடிக்கவே, நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றது.
விசாரணை
பின், வாணியம்பாடி போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
திருப்பத்துார் கலெக்டர் அமர் குஷாவா, எஸ்.பி., பாலகிருஷ்ணன், கோட்டாட்சியர் பிரேமலதா மற்றும் அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர்.நெரிசலில் சிக்கி, 60 வயது நிறைந்த நான்கு பேர், சம்பவ இடத்திலேயே பலியானது தெரிந்தது.மேலும், படுகாயம்அடைந்த 16 பேர், வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் 12 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். வாணியம்பாடி போலீசார், நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த தொழிலதிபர் அய்யப்பனை, நேற்று இரவு கைது செய்தனர்.
இதற்கிடையே, இந்த சம்பவத்தில் உயிரிழந்த நான்கு பெண்களுக்கு தலா, 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு, 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும், திருப்பத்துார் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சரான, பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, தன் சொந்த பணத்தில், உயிரிழந்தவர்களுக்கு தலா, 1 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கினார். இலவச புடவைக்கு ஆசைப்பட்டு, நெரிசலில் சிக்கி நான்கு பெண்கள் உயிரிழந்த சம்பவம், வாணியம்பாடி சுற்றுவட்டார மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அய்யப்பன் குடும்பத்தார், 24 ஆண்டுகளாக, தைப்பூசத்தை முன்னிட்டு, ஏழை பெண்களுக்கு இலவச புடவை வழங்கி வந்தனர். இதுவரை, 500 முதல் 1,000 பேருக்கு மட்டுமே புடவை வழங்கினர். இந்த ஆண்டு, 25வது ஆண்டு என்பதால், அதை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக, வேட்டி, புடவை, ஜாக்கெட், மஞ்சள் கயிறு உட்பட, 800 ரூபாய் மதிப்பிலான பொருட்களை, 2,000 பேருக்கு வழங்க ஏற்பாடு செய்தனர். ஆனால், நிகழ்ச்சி ஏற்பாடுகளை உரிய அனுமதி, பாதுகாப்பு இன்றி செய்ததால், பெரும் விபரீதத்தில் முடிந்துள்ளது.
வாணியம்பாடி சந்தை அலுவலக வளாகத்தில் நேற்று டோக்கன் மட்டுமே வினியோகம் செய்ய முடிவு செய்திருந்தனர். டோக்கன் பெற்றவர்களுக்கு இன்று புடவை வழங்குவதாக இருந்தது. டோக்கன் பெறக் கூடியிருந்த பெண்களிடம், யாரோ சிலர், நேற்றே புடவையும் வழங்குவதாக வதந்தி பரப்பி விட்டுள்ளனர். இதனால் முண்டியடித்த கூட்டத்தால் தான் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. வதந்தி பரப்பியது யார் என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.