வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி,-''அதானி நிறுவனம், அதன் தொடர் பங்கு வெளியீட்டை திரும்ப பெற்றதால், இந்திய பொருளாதாரத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதானியால் பங்குச் சந்தைகள் சரிந்தால், இதை அவற்றுக்கான சீரமைப்பாளர்களும், கட்டுப்பாட்டாளர்களும் கவனித்துக் கொள்வர்,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
![]()
|
'ஹிண்டன்பர்க் ரிசர்ச்' என்ற அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனம், தொழில் அதிபர் அதானி நிறுவனங்கள் குறித்த கடுமையான குற்றச்சாட்டுகளுடன் கூடிய அறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது.
இது, சந்தையில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக அதானி நிறுவன பங்குகள் மட்டும் இன்றி, சந்தையும் சரிவை சந்தித்தது.
அன்னிய செலாவணி
'அதானி என்டர்பிரைசஸ்' நிறுவனம் சமீபத்தில், 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்காக, தொடர் பங்கு வெளியீட்டுக்கு வருவதாக அறிவித்திருந்தது.
ஆனால், ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையால், சந்தையில் பங்குகள் வீழ்ச்சி அடைந்ததும், முதலீட்டாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என தெரிவித்து, அதானி குழுமம் தொடர் பங்கு வெளியீட்டை திரும்ப பெற்றது.
இந்நிலையில், இது குறித்து மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான நிர்மலா சீதாராமனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது நிதியமைச்சர் கூறியதாவது;
அதானி நிறுவனம் தொடர் பங்கு வெளியீட்டை திரும்ப பெற்றதால், இந்திய பொருளாதார பிம்பத்துக்கு எந்த வகையிலும் பாதிப்பில்லை.
நம் பொருளாதார அடிப்படைகள் வலுவாக இருப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் அன்னிய செலாவணி இருப்பில், 65 ஆயிரத்து 600 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
' செபி' பார்த்துக் கொள்ளும்
ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பங்குச் சந்தைகளில் ஏற்ற, இறக்கங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
ஆனால், கடந்த சில நாட்களாக நம் நாட்டில் ஏற்பட்ட வளர்ச்சி, இந்தியாவின் உள்ளார்ந்த பலம் அப்படியே உள்ளது என்பதை எடுத்துக் காட்டுகிறது.
பங்குச் சந்தைகளின் நிலைத் தன்மையை உறுதி செய்வதற்கு, சுதந்திரமான கண்காணிப்பு அமைப்பான 'செபி' உள்ளது.
![]()
|
சந்தைகளை முதன்மை நிலையில் வைத்திருப்பதற்கான அதிகாரம் படைத்தது செபி தான். இது, சந்தையின் இந்த நிலையை தக்கவைத்துக் கொள்ளும்.
இந்த விவகாரம் குறித்து ரிசர்வ் வங்கியும், அதன் நிலைப்பாட்டை எடுத்துச் சொல்லி விட்டது. வங்கித் துறை வலுவாக இருப்பதை, அது தெளிவுபடுத்தி விட்டது. எனவே, இந்திய பொருளாதாரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.