வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
புதுடில்லி: எதிர்க்கட்சிகள் வாரிசு அரசியல் நடத்துகின்றன என குற்றஞ்சாட்டி வரும் பா.ஜ.,விலும், வாரிசு அரசியல் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இக்கட்சியிலும், சில மாநில தலைவர்களின் வாரிசுகளை கவனிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
![]()
|
வரும் 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, ராஜஸ்தான் மற்றும் கர்நாடகாவில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சியும், ராஜஸ்தானில் காங்., ஆட்சியும் நடைபெறுகின்றன.
இந்த இரு மாநிலங்களிலும், பா.ஜ., தலைவர்கள் தங்கள் வாரிசுகளுக்கு பதவி கேட்டு வருகின்றனர். தராவிட்டால் பிரச்னையை கிளப்புவதோடு, தேர்தலில் பா.ஜ.,வை தோற்கடிக்கவும் அவர்கள் தயாராகி வருகின்றனர்.
கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா, தன் மகன் விஜயேந்திராவிற்கு எம்.எல்.ஏ., சீட்டும், மாநிலத்தில் வரும் தேர்தலில் ஆட்சியை தக்க வைத்தால், துணை முதல்வர் பதவியும் தர வேண்டும் என மல்லுக்கட்டுகிறார்.
இதே போல ராஜஸ்தானிலும், பா.ஜ., முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே தன் மகன் துஷ்யந்த் சிங்கிற்கு மத்திய அமைச்சர் பதவி தர வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
![]()
|
இவர்களுடைய வாரிசுகளுக்கு பதவி தராவிட்டால், சட்டசபை தேர்தல்களில் பா.ஜ., வெற்றி பெற முடியாது என்பது மேலிட தலைவர்களுக்கு நன்றாக தெரியும். காரணம், எடியூரப்பாவுக்கும், வசுந்தராவுக்கும் அவரவர் மாநிலங்களில் நல்ல செல்வாக்கு உள்ளது. இவர்களை பகைத்துக் கொள்ள பா.ஜ., மேலிட தலைவர்கள் தயாராக இல்லை.
சமீபத்தில் நடந்து முடிந்த ஹிமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில், பா.ஜ., தலைமை வாரிசுகளுக்கு 'சீட்' தர மறுத்துவிட்டது. இதன் விளைவாக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துவிட்டது. எனவே, ஹிமாச்சல பிரதேசத்தில் நடந்தது போல, கர்நாடகா, ராஜஸ்தானில் நடந்து விடக்கூடாது என்பதால், வாரிசுகளைக் கவனிக்க பா.ஜ., தலைமை முடிவெடுத்துவிட்டதாம்.
Advertisement