வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-சென்னை 'குளோபல் பார்மா' நிறுவனத்தில் மத்திய - மாநில மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
![]()
|
சென்னை, திருப்போரூரில், 'குளோபல் பார்மா ஹெல்த்கேர்' நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனம் தயாரித்த 'எஸ்ரிகேர், எல்.எல்.சி., மற்றும் டெல்சம் பார்மா' ஆகிய மருந்துகளால், அமெரிக்கர்களுக்கு பார்வை பாதிக்கப்படுவதாக, அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு குற்றம்சாட்டியது.
அந்நிறுவன மருந்துகளை இறக்குமதி செய்யவும் தடை விதித்துள்ளது.
இந்த நிறுவனத்தின் மருந்துகள், இந்தியாவில் விற்கப்படவில்லை. அதேநேரம், அமெரிக்காவில் விற்பனைக்கு உள்ள மருந்துகளை திரும்ப பெறுவதாக, குளோபல் பார்மா நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, தாமாக முன்வந்து, அந்நிறுவனம் மருந்து தயாரிக்கும் பணியை நிறுத்தியுள்ளது.
இந்நிலையில், திருப்போரூரில் உள்ள அந்நிறுவன தொழிற்சாலையில், மத்திய - மாநில மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள், நேற்று முன்தினம் இரவு ஆய்வு செய்தனர்.
அதிகாலை 2:00 மணி வரை நடந்த ஆய்வில், மருந்து தொழிற்சாலையில் இருந்த மூலப்பொருட்கள் மற்றும் தயாரித்த மருந்துகளின் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து, மருந்து கட்டுப்பாட்டு துறை இயக்குனர் விஜயலட்சுமி கூறியதாவது:
குளோபல் பார்மா ஹெல்த்கேர் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் மருந்துகள், இந்தியாவில் சந்தைப்படுத்தப் படவில்லை. எனவே, தமிழக மக்கள் அச்சப்பட வேண்டாம். அமெரிக்கா குற்றச்சாட்டை தொடர்ந்து, அந்நிறுவனத்தில் ஆய்வு செய்து மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம்.
![]()
|
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமும், மருந்துகளை ஆய்வு செய்து, அதன் முடிவுகளை இதுவரை வெளியிடவில்லை.
எங்களது சோதனை முடிவுகளை, மத்திய, மாநில அரசுகளுக்கு அறிக்கையாக சமர்ப்பித்துள்ளோம். அமெரிக்காவின் சோதனை முடிவுகள் வந்த பின், அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதுவரை, குளோபல் பார்மா நிறுவனத்தில், எந்த உற்பத்தி பணியையும் மேற்கொள்ளக் கூடாது என, உத்தரவிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement