வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
சென்னை-ஓட்டுனர்களாக பணிபுரியும் துாய்மைப் பணியாளர்களை, பணி வரன்முறை செய்யும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொந்த மக்களை சுரண்டாமல், முன்மாதிரி முதலாளியாக அரசு திகழும்படி, உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

கோவை மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்களாக நியமிக்கப்பட்ட ஏழு பேர், ஓட்டுனராக பணியாற்றினர்.
தங்களை ஓட்டுனராக நியமனம் செய்யும்படி, அவர்கள் கோரினர். அதற்கு ஓட்டுனர் பணிக்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என விதி உள்ளதால், அவ்வாறு நியமிக்க முடியாது என, மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வழக்கு
இதையடுத்து, ஓட்டுனர் பணிக்கு, 8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் உரிமம் இருந்தால் போதுமானது என தகுதியை தளர்த்தி, 1997ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை சுட்டிக்காட்டி, உயர் நீதிமன்றத்தில், ஏழு பேரும் வழக்கு தொடர்ந்தனர்.
இதற்கு, அரசு தரப்பில், 'கல்வித் தகுதியை தளர்த்தினாலும், பணி விதிகளில் அது இடம் பெறாததால், மனுதாரர்கள் சலுகை கோர முடியாது' என, கூறப்பட்டது.
மனுவை, உயர் நீதிமன்ற தனி நீதிபதி விசாரித்தார்.
ஓட்டுனர்களாக நியமிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் பலருக்கு, தகுதியை தளர்த்தி பணி வரன்முறையை அரசு மேற்கொண்டுள்ளதால், இந்த ஏழு பேரையும் ஓட்டுனர்களாக பணி வரன்முறை செய்யும்படி, தனி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து, நகராட்சி நிர்வாகத் துறை மற்றும் கோவை மாநகராட்சி, 2018ல் மேல்முறையீடு செய்தது.
மனுவை, நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், சத்திகுமார் சுகுமார குருப் அடங்கிய அமர்வு விசாரித்தது.
ஏழு பேர் சார்பில், வழக்கறிஞர் விஜய்சங்கர் ஆஜராகி, 'ஓட்டுனர்களாக பணியாற்றிய 10 துப்புரவு பணியாளர்களின் கல்வி தகுதியை தளர்த்தி, இதற்கு முன் இதே கோவை மாநகராட்சி பணி வரன்முறை செய்துள்ளது' என்றார்.
அரசுக்கு பொருந்தாது
மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
ஏழு பேருக்கும் பணி வரன்முறை மறுப்பதற்கு எந்த காரணமும் இல்லை. ஏழு பேரும் ஓட்டுனர் பணியை, முதலில் இருந்தே மேற்கொள்கின்றனர். அவர்களை துப்புரவு பணியாளர்களாக கருதுவது, சுரண்டலுக்கு சமமானது.
துப்புரவு பணியாளர்களின் ஊதியத்தை விட, ஓட்டுனர்களுக்கான ஊதியம் அதிகம்.
சில சம்பவங்களை பார்க்கும்போது, சொந்த குடிமக்களையே அரசு சுரண்டுவது தெரிகிறது. இந்த நடைமுறையை நிறுத்த வேண்டும். அரசு, ஒரு முன்மாதிரி முதலாளியாக திகழ வேண்டும். பணியாளர் தேர்வுக்கும், நிர்வாகத்துக்கும் பொறுப்பானவர்கள், இதை உணர வேண்டும்.

அரசு நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். தனியார் நிறுவனங்களின் ஊழியர்களை பாதுகாக்க, பல சட்டங்கள் உள்ளன. அவை அரசுக்கு பொருந்தாது.
அரசு சுரண்டலில் ஈடுபடாது என்ற நம்பிக்கையில் தான், விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அனுபவம் வேறு மாதிரியாக உள்ளது.
மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இரண்டு மாதங்களில், தனி நீதிபதியின் உத்தரவை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Advertisement