கள்ளக்குறிச்சி : மாவட்ட காவல்துறை சார்பில் குற்ற கலந்தாய்வுக் கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடந்தது.
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு, எஸ்.பி., மோகன்ராஜ் தலைமை தாங்கினார். ஏ.டி.எஸ்.பி.,க்கள் விஜய கார்த்திக்ராஜா, ஜவஹர்லால் முன்னிலை வகித்தனர்.
டி.எஸ்.பி.,க்கள் ரமேஷ், மகேஷ், பழனி, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு திருமேனி, நில அபகரிப்பு தடுப்பப் பிரிவு பாலசுப்ரமணியன், போதை மற்றும் சாராய தடுப்பு பிரிவு ரவிசந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அந்தந்த காவல் நிலையங்களில் பதியப்பட்ட வழக்குகள், தீர்வு காணப்பட்டவைகள், நிலுவையில் உள்ளவை குறித்தும், அதற்கான காரணங்களையும் எஸ்.பி., காவல் நிலையம் வாரியாக கேட்டறிந்தார். குற்ற வழக்குகளை வேகமாகவும், முழுமையாகவும், நேர்மையாகவும் முடித்திட வேண்டும் என வலியுறுத்தினார்.
தொடர்ந்து மாவட்டம் முழுதும் குற்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
குற்ற வழக்குகளில் உடனடி தீர்வு கண்ட குற்றப்பிரிவு போலீசார் கள்ளக்குறிச்சி ஆனந்தராஜ் உட்பட மாவட்டம் முழுமையாக 18க்கும் மேற்பட்ட போலீசாருக்கு நற்சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
கூட்டத்தில், அனைத்து காவல்நிலைய இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், எழுத்தர்கள் பங்கேற்றனர்.