வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை,-''இந்தியாவில் அடுத்த ஏழு ஆண்டுகளில், விமானங்களின் எண்ணிக்கை 2000 ஆக அதிகரிக்கக் கூடும்,'' என, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா கூறினார்.
![]()
|
சென்னை சர்வதேச விமான நிலையத்தில், 250 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ஆறடுக்கு 'மல்டி லெவல் கார் பார்க்கிங்' மற்றும் ஐந்து திரைகளுடன் கூடிய 'மல்டிபிளக்ஸ் தியேட்டர்' உணவு விடுதி, வணிக வளாகம் போன்றவற்றை, அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, நேற்று திறந்து வைத்தார்.
கட்டாயம்
அவர் பேசியதாவது:
சென்னை விமான நிலையத்தில், பயணியரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் திட்டம் இருந்தாலும், தற்போதைய விமான நிலையத்தை விரிவுபடுத்த வேண்டியது கட்டாயம்.
அதற்கு தேவையான நிலத்தை மாநில அரசு கையகப்படுத்தி, இந்திய விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
அதை மாநில அரசு விரைந்து செய்தால், சென்னை விமான நிலைய விரிவாக்க பணியை வேகமாக செயல்படுத்த முடியும்.
இந்தியாவின் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழகத்தில் விமான சேவைகளின் வளர்ச்சி திருப்திகரமாக உள்ளது. அருணாச்சல பிரதேசத்தில், மூன்று விமான நிலையங்கள் மட்டுமே உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் ஒன்பது விமான நிலையங்கள் உள்ளன.
நாடு முழுதும் உள்ள விமான நிறுவனங்களிடம், 2014ல் 400 விமானங்கள் மட்டுமே இருந்தன. தற்போது, 700 விமானங்களாக அதிகரித்துள்ளன. அடுத்த ஏழு ஆண்டுகளில், இந்த விமானங்களின் எண்ணிக்கை 2000 ஆக அதிகரிக்கக் கூடும்.
கடந்த 2014ல் சென்னை விமான நிலையத்தில் இருந்து, 34 நாடுகளின் பெரு நகரங்களை இணைக்கும் விதத்தில், விமான சேவைகள் நடந்தன. தற்போது, 61 நாடுகளின் நகரங்களை இணைக்கும் வகையில் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
உள்நாட்டு விமான சேவைகளின் வளர்ச்சி, 19 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது நாடு முழுதும் 20 கோடி பேர் விமான சேவையை பயன்படுத்துகின்றனர். வரும் காலத்தில், இது 40 கோடியாக அதிகரிக்கும்.
![]()
|
பங்கேற்பு
எனவே பிரதமர், நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில், அதிக அக்கறை, கவனம் செலுத்தி வருகிறார். தமிழக அரசு ஒருங்கிணைந்து, தேவையான நிலங்களை தாமதப்படுத்தாமல் விரைந்து கையகப்படுத்தி கொடுத்தால், விமான நிலையங்கள் அனைத்தும் மேம்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, எம்.பி.,க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி சோமு, சென்னை விமான நிலைய ஆணைய தலைவர் சஞ்சீவ்குமார், இயக்குனர் சரத்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.