வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்துக்கான தேதி, இரு தரப்பிலும் பேசப்பட வேண்டிய விஷயங்கள் ஆகியவை குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
![]()
|
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தங்கள் நாட்டுக்கு வரும்படி பிரதமர் மோடிக்கு சமீபத்தில் அழைப்பு விடுத்திருந்தார். இதை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்திய பெருங்கடல் பகுதியிலும், தென் சீன கடல் பகுதியிலும் சீனாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், சர்வதேச அளவில் அமெரிக்காவுக்கு கடும் சவாலாகவும் சீனா விளங்கி வருகிறது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்தியாவுடனான நட்பை பலப்படுத்த அமெரிக்கா விரும்புகிறது. குறிப்பாக, ராணுவம், வெளியுறவுத் துறை போன்ற விஷயங்களில் இரு தரப்பும் இணைந்து செயல்படலாம் என, அமெரிக்கா கருதுகிறது. சர்வதேச அளவில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவினாலும், இந்தியாவின் பொருளாதாரம் நிலையாக உள்ளது. மேலும், 'ஜி -- 20' நாடுகளின் அமைப்புகளுக்கு தலைமையேற்றுள்ள இந்தியா, இது தொடர்பான தொடர் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
இதன் காரணமாக உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாடான இந்தியாவுடன், அமெரிக்கா நெருக்கம் காட்ட விரும்புகிறது. இதற்காகவே, பிரதமர் மோடியுடன் பேச்சு நடத்த, அவருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம், வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேதியை இறுதி செய்வது குறித்தும், சந்திப்பின் போது பேசப்பட வேண்டிய விஷயங்கள் குறித்தும், இரு நாட்டு அதிகாரி களும் தொடர்ந்து தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சுல்வியனுடன் இது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே, அமெரிக்க பயணத்தின் போது, அந்த நாட்டு பார்லிமென்டில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தவுள்ளதாகவும், வெள்ளை மாளிகையில் அதிபர் பைடனுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை.
![]()
|
இதற்கிடையே, வரும் செப்டம்பரில் நடக்கவுள்ள ஜி - 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான ஆலோசனைகளும் துவங்கியுள்ளன.
அமெரிக்காவைச் சேர்ந்த, 'மார்னிங் கன்சல்ன்ட்' என்ற அரசியல் ஆய்வு நிறுவனம், கடந்த மாத இறுதி வாரத்தில், 22 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களில், செல்வாக்கான தலைவர் யார் என்ற ஆய்வை நடத்தியது. இதில், 78 சதவீத ஆதரவுடன் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் அதிபர் ஆண்ட்ரூஸ் மேனுவல் லோபேஜ், 68 சதவீத ஆதரவுடன் இரண்டாம் இடத்திலும், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் அதிபர் அலைன் பெரேஸ்ட், 58 சதவீத ஆதரவுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆறாவது இடத்திலும், பிரிட்டன் அதிபர் ரிஷி சுனக், 10வது இடத்திலும் உள்ளனர்.