மயிலாடுதுறை: சீர்காழி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே பிளாஸ்டிக் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தென்பாதி பகுதியைச் சேர்ந்த திருப்பதி மகன் திருஞானம் என்பவர் அகீதாலயா என்ற பெயரில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார்.
இந்த கடையினுடைய குடோன் சுவாமிநாத செட்டி தெருவில் உள்ளது. இந்த குடோனில் உள்ள பொருட்கள் இன்று(பிப்.,05) திடீரென தீப்பற்றி எரிந்தது. தீ குடோன் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது பிளாஸ்டிக் பொருட்கள் எரிவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றத்துடன் கூடிய கரும்புகை சூழ்ந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பெயரில் சீர்காழி தீயணைப்பு மற்றும் மீட்ப படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புடைய பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகின. இது குறித்து சீர்காழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.