தஞ்சாவூர் : டெல்டா மாவட்டங்களில், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து வேளாண் துறையினர் தீவிரமாக கணக்கெடுத்து வருகின்றனர்.
டெல்டா மாவட்டங்களான, தஞ்சாவூரில், 3.47 லட்சம் ஏக்கர், திருவாரூரில், 3.75, நாகையில், 1.67, மயிலாடுதுறையில், 1.80 லட்சம் ஏக்கர் என, மொத்தம், 10.69 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது.
நேற்று முன்தினம் பெய்த மழையால், அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்தன. மேலும், நேற்று காலை முதல் பெய்த மழையால், வயல்களில் தண்ணீர் தேங்கி, பயிர்களின் மகசூல் இழப்பு ஏற்படும் சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
அறுவடை செய்து கொள்முதல் நிலையங்களில் கொட்டி வைத்துள்ள நெல்லும் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, வேளாண் துறையினர் உள்ளிட்டோர் கணக்கெடுப்பு பணியை நேற்று முன்தினம் துவங்கியுள்ளனர்.
இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா பருவ நெற்பயிர்கள், 41 ஆயிரத்து, 700 ஏக்கர், உளுந்து, 1,573 ஏக்கர், நிலக்கடலை 1,150 ஏக்கர், திருவாரூர் மாவட்டத்தில் நெற்பயிர்கள், 27 ஆயிரம் ஏக்கர், உளுந்து, 18 ஆயிரம் ஏக்கர், நிலக்கடலை, 2,170 ஏக்கர் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
நாகை மாவட்டத்தில் நெற்பயிர்கள், 25 ஆயிரம் ஏக்கர், மயிலாடுதுறை மாவட்டத்தில் நெற்பயிர், 34 ஆயிரத்து, 500 ஏக்கர், உளுந்து, 37 ஆயிரம் ஏக்கர் தண்ணீரில் மூழ்கியுள்ளதாக முதற்கட்டமாக தெரியவந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில், 17 ஆயிரத்து, 500 ஏக்கர் நெற்பயிர் மூழ்கி உள்ளது.
நெல் அறுவடைக்கு தயாராக இருந்த சமயத்தில் மழை நீரில் மூழ்கியதால், ஏக்கருக்கு, 30 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும்; நெல்லின் ஈரப்பதம், 22 சதவீதம் வரை உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து வேளாண் துறை அலுவலர்கள் கூறுகையில், 'மழையால் வயல்களில் நெற்பயிர்கள் சாய்ந்துவிட்டதால், அறுவடை செய்ய சிரமமாக இருக்கும். இன்னும், இரண்டு நாட்கள் கடந்த பின் தான், பாதிப்பு முழுமையாக தெரியும். அதை அரசுக்கு அறிக்கையாக அளிப்போம்' என்றனர்.