வேலுார் : வேலுார் அருகே, மணல் கடத்தலில் ஈடுபட்ட ஊராட்சி டிராக்டரை, மக்கள் சிறைபிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
வேலுார் மாவட்டம், விரிஞ்சிபுரம் பாலாற்றில் மணல் கடத்தப்படுகிறது. மக்கள் புகார் செய்தும், போலீசார் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து, மக்களே மணல் கடத்தலை தடுக்க கண்காணித்து வந்தனர். நேற்று காலை, 11:00 மணிக்கு விரிஞ்சிபுரம் பாலாற்று பகுதியிலிருந்து, காட்பாடி நோக்கி ஒரு டிராக்டர் வந்தது. அதை, 50க்கும் மேற்பட்டோர் மடக்கி சிறை பிடித்தனர்.
டிரைவர், அதிலிருந்த இரண்டு பேர் நிறுத்தி விட்டு தப்பினர். டிராக்டரில் மணல் இருந்தது. லத்தேரி போலீசில் மக்கள் புகார் செய்தனர்.
விசாரணையில், விரிஞ்சிபுரம் ஊராட்சிக்கு சொந்தமான டிராக்டரில், மணல் கடத்தியது தெரியவந்தது. இரண்டு டன் மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்து, தப்பியோடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.