வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : ஆவணங்களை ரத்து செய்ய, மாவட்டப் பதிவாளருக்கு அதிகாரம் வழங்கிய சட்ட திருத்தத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு பதில் அளிக்க, அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, அடையாறைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் தாக்கல் செய்த மனு:
குன்றத்துார் தாலுகா, ஆதனுார் கிராமத்தில், எங்கள் குடும்பத்துக்கு சொந்தமாக சொத்துக்கள் உள்ளன. என் தந்தைக்கு உரிய சொத்தின் பங்கை, எனக்கு 'செட்டில்மென்ட்' வாயிலாக எழுதி வைத்தார். இதை ரத்து செய்யும்படி, விட்டல் என்பவர் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, மாவட்டப் பதிவாளர், எனக்கு 'நோட்டீஸ்' அனுப்பினார்.
எட்டு ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை ரத்து செய்யும் முயற்சியாக, இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
![]()
|
போலி ஆவணங்களை ரத்து செய்ய, பதிவாளருக்கு அதிகாரம் வழங்கி, 2022ல் சட்டத் திருத்தம் வந்தது. சொத்து உரிமை குறித்து, மாவட்டப் பதிவாளர் முடிவு செய்ய முடியாது. அதற்கு, அவர் தகுதியானவர் அல்ல. இந்த சட்டத் திருத்தம் தன்னிச்சையானது; அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது.
எனவே, மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் வழங்கிய சட்டத் திருத்தத்தை, ரத்து செய்ய வேண்டும். மாவட்டப் பதிவாளர் அனுப்பிய நோட்டீஸ் தொடர்பான நடவடிக்கைக்கு, தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் கே.சக்திவேல் ஆஜரானார். மனுவுக்கு, இரண்டு வாரங்களில் பதில் அளிக்க, அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.